வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. மேலும் இவர் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் மூலமும் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர். இவரின் நண்பர்களே திருடர்களாக இருந்ததாக இன்ஸ்மாகிராமில் வேதனை தெரிவித்துள்ளார் நடிகை ஷம்மு.
சென்னை புரசைவாக்கம் பகுதியில் வசித்து வரும் ஷம்மு, கடந்த 9-ம் தேதி இரவு ஈஸ்டர் பண்டிகை நாளில், எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றுள்ளார்.
பின்னர் அதை முடித்துவிட்டு சூளைமேட்டில் தன் நண்பர் வீட்டில் அன்றிரவு தங்கியுள்ளார். மறுநாள் 10-ம் தேதி காலை எழுந்து பார்த்தபோது, ரூ.2 லட்சம் மதிப்பில், தான் புதிதாக வாங்கிய ஐ-போனை காணாமல் திகைத்துள்ளார்.
தன் எண்ணுக்கு போன் செய்தும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் பதற்றமடைந்த அவர், செல்போன் தொலைந்தது தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் தன் நண்பர்கள் சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார். நடிகையின் புகாரின் பேரில் அவரின் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் நடிகை ஷாலு ஷம்முவின் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதில், தான் காணாமல் போனதாக புகார் அளித்த ஐபோன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து தான் சந்தேகப்பட்ட நபர் தான், தனது போனை திருடியதாகவும் எட்டு வருட நட்பு அர்த்தமற்றுப் போனதாகவும், தன் சமூகவலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.