சென்னை: திருமண மண்டபங்கள், மைதானங்களில் மதுபானங்கள் விநியோகிக்கலாம் என்ற அரசாணைக்கு ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் உரிய கட்டணம் செலுத்தி மதுபானங்கள் விநியோக்க அனுமதி வழங்கும் அரசாணையை ஆளும் திமுக அரசு வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜவாஹிருல்லா, திருமணங்கள். விருந்துகள். விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மதுபானம் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் தமிழக அரசின் முடிவு ஆரோக்கியமானது அல்ல. இந்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் . ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் வாகன விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. பொது நிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கினால் மோசமான சமுதாய சீரழிவையும் சாலை விபத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடும். இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து மக்களின் வரவேற்பைப் பெற்ற தமிழக அரசு மக்கள் நலன் கருதி திருமண மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வினியோகிக்க அனுமதிக்கும் இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசின் 12 மணிநேர வேலை நிறுத்த மசோதா கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. ஆளும் திமுக அரசின் அத்தனை கூட்டணி கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது மண்டபங்கள், மைதானங்களில் மதுவிநியோகிக்க அனுமதிக்கும் அரசாணையும் இணைந்துள்ளது.