சென்னை: தமிழக அரசு சமீபத்தில் 12 மணி நேரம் வேலை நேரம் என்ற மசோதா கொண்டு வந்தது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே உலகில் மற்ற நாடுகளில் வேலை நேரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் நிறைவேற்றிய ஒரு சட்ட மசோதா மிகப் பெரியளவில் எதிர்ப்பை கிளப்பியது. வழக்கமாக எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆளும் தரப்பு கொண்டு வரும் மசோதாக்களை எதிர்ப்பார்கள்.
ஆனால், இந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகளே இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை எதிர்த்து கடையடைப்பு போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் விவாதத்தையே இந்த மசோதா கிளப்பியுள்ளது.
சட்ட மசோதா: இந்த சட்ட மசோதாவின்படி, தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது.. சில தனியார் ஐடி நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகவும் இதை ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடும் எதிர்ப்பு இருந்த போதிலும், குரல் மசோதா மூலம் இது நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பது தான் சரி.. அதை மாற்றி 12 மணி நேரம் வேலை என்பதை ஏற்க முடியாது என்றே பலரும் சாடி வருகின்றனர். இருப்பினும், அரசு தினசரி வேலை நேரம் தான் 12 மணி நேரமாக உயர்த்தலாம். அதேநேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
48 மணி நேரம்: இப்போது உலகின் பல நாடுகளிலும் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பதே வேலை நேரமாக இருக்கிறது. இருப்பினும், சில பல ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் இன்னுமே குறைவாக உள்ளது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டும், புதிய புதிய விஷயங்களை கற்றால் மட்டுமே நம்மால் வேலையில் கவனம் செலுத்த முடியும் என்று இந்த நாடுகள் நம்புகின்றன. இதனால் தான் வேலை நேரத்தை இவர்கள் குறைவாகவே வைத்துள்ளனர்…
அதன்படி பார்த்தால் உலகிலேயே நெதர்லாந்து நாட்டில் தான் வேலை நேரம் மிகக் குறைவாக உள்ளது. நெதர்லாந்து நாட்டில் சராசரியாக ஒருவர் 29.5 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும். அதேபோல டென்மார்க் நாட்டில் ஒருவர் வெறும் 32.5 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும். நார்வே நாட்டில் 33.6 மணி நேரமும், சுவிட்சர்லாந்து நாட்டில் 34.6 மணி நேரமும் வேலை செய்தால் போதும்.
மகிழ்ச்சியான நாடுகள்: அதேபோல ஆஸ்திரியாவில் ஒருவர் அதிகபட்சம் 35.4 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். இதேபோல ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம்,பின்லாந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் குறைவாகவே உள்ளது. recreational activities எனப்படும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் நடவடிக்கைகளில் அதிகம் நேரத்தைச் செலவு செய்தால் மட்டுமே வேலை செய்யும் நேரத்தில் சிறப்பாக வேலை செய்ய முடியும் ன்பதே இந்த நாடுகள் நம்புகின்றன.
வேலை நேரம் குறைவாக உள்ள நாடுகள் பட்டியில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து நாடுகளும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலிலும் டாப் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வேலை நேரம் மிகக் குறைவாக உள்ள நெதர்லாந்து மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல டென்மார்க், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளிலும் வேலை நேரம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.