12 மணி நேர வேலை திட்டம் தொடர்பாக முக ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
12 மணிநேர வேலை சட்டம் இயற்றப்பட்ட நாள் கருப்பு நாள்- பிஆர் பாண்டியன்
தனியார் தொழில் நிறுவனங்களிக் 12 மணி நேர வேலை செய்வதற்கான தீர்மானத்தை கடந்த 21ம் தேதி தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் உடனிருந்த கூட்டணி கட்சிகளும்,
அரசின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து வெளிநடப்பு செய்தன. முழுக்க முழுக்க திமுக உறுப்பினர்களாலே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் மற்றும் 8 மணி நேரம் குடும்பம் உறவுகளுக்காக ஒதுக்கப்பட்டும் வகையில் பல வருடங்கள் போராடி பெற்ற உரிமையை, திமுக அரசு மண்ணள்ளி போட்டதாக அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக சாடின. இது உழைப்பு சுரண்டலுக்கே வழி வகுக்கும் எனவும், சர்வதேச முதலாளிகளுக்கு விசுவாசமான நடவடிக்கை எனவும், மேலும் கடந்த காலத்தில் 12 மணி நேர வேலை திட்டத்தை திமுக எதிர்த்தது என்பதையும் ஆதராங்களுடன் நெட்டிசன்கள் பொளந்து கட்டினர். மேலும் பாஜக மட்டுமே இந்த நடவடிக்கையை ஆதரித்ததால், இது தொழிலாளர் விரோத நடவடிக்கை என கூறப்பட்டது.
ஆனால் திமுக அரசின் இந்த செயலை நியாயப்படுத்தும் வகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘தமிழ்நாட்டில் அதிக அளவு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்காகவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். 12 மணி நேர வேலையை எந்தத் தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த மசோதாவை நிறைவேற்ற குழு அமைக்கப்படும்’’ என கூறினார்.
தொழில்துறை அமைச்சரின் இந்த விளக்கத்திற்கும், தொழிலாளர் நலத்தில் அக்கறை கொண்ட கட்சிகள் மற்றும் நெட்டிசன்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதைத் தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களும் அரசின் செயலுக்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் வருகிற 12ம் தேதி போராட்டத்தையும் அறிவித்தனர். அதேபோல் திமுக தொழிற்சங்கமும் அரசின் போக்கினை கண்டித்தது. இந்த சூழலில் அனைத்து தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்புகளை அடுத்து, இந்த 12 மணி நேர வேலை திட்ட மசோதாவை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர்
வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்ட முன்முடிவின் மேல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசின் திடீர் பல்டிக்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தான் என கூறப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுதால் திமுக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்,