சென்னை: Ajith Shalini Wedding Anniversary (அஜித் ஷாலினி திருமண நாள்) அஜித் – ஷாலினியின் 23ஆம் ஆண்டு திருமண நாள் இன்று. இந்தச் சூழலில் அவர்களது திருமணத்துக்கு பிரசாந்த்தால் வந்த குடைச்சல் குறித்து தெரியவந்திருக்கிறது.
சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இன்று அவர்கள் தங்களது 23ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிவருகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
காதல் மலர்ந்த கதை: அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.
அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, ‘சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல’ என போட்டு உடைத்திருக்கிறார் அஜித்.
காதலை சொன்ன அஜித்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து திருமணமும் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்தின்போது அலைபாயுதே: சூழல் இப்படி இருக்க அந்த சமயத்தில்தான் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் நடிப்பதற்கு ஷாலினிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அதற்கு ஷாலினி ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து சுஹாசினி ஷாலினியிடம் ஸ்க்ரிப்ட்டை படித்துவிட்டு முடிவு செய் என கூற; அலைபாயுதே ஸ்க்ரிப்ட்டை படித்துவிட்டு பிடித்ததால் அந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார் ஷாலினி. படமும் மெகா ஹிட்டானதும், இன்றுவரை ஷாலினி ஏற்றிருந்த சக்தி கதாபாத்திரம் பலரது ஃபேவரைட் என்பது அனைவரும் அறிந்தது.
பிரசாந்த்தால் வந்த குடைச்சல்: இதற்கிடையே அஜித் – ஷாலினியின் திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டுவிட்டது. அதன்படி 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலில் அவர்களுக்கு திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் திருமண தேதி குறிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரியாத வரம் வேண்டும் படத்தில் கமிட்டாகியிருந்தார் ஷாலினி. எனவே ஜனவரி மாதத்துக்குள் படத்தை முடிக்க தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார் ஷாலினி. ஆனால் பிரசாந்த்தின் கால்ஷீட் அந்த நேரத்தில் கிடைக்கவில்லை.
தள்ளிப்போன தேதி: இதனையடுத்து திருமண தேதி தள்ளி வைத்தார்கள். அதன்படி 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணத்திற்காக குறித்தார்கள். ஆனால் அப்போதும் பிரியாத வரம் வேண்டும் படத்தை முடிப்பதற்கு பிரசாந்த்தின் கால்ஷீட் கிடைக்கவில்லை. இதனால் உச்சக்கட்ட கோபத்துக்கு சென்றார் ஷாலினி. எனவே கடைசி முறையாக ஏப்ரல் 24ஆம் தேதிக்கு திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு கடிதம்: திருமணத்தை தள்ளி வைத்த கையோடு, தயாரிப்பு சங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினார் ஷாலினி. அதில், தனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதனால் கமிட்டான படத்தில் நடித்து முடிக்க நினைத்தேன். ஆனால் ஷூட்டிங் நடத்தப்படவே இல்லை. இதனால் ஏற்கனவே இரண்டு முறை திருமண தேதியை தள்ளி வைத்தேன். இப்போது மீண்டும் தள்ளி வைத்திருக்கிறேன்.
இந்த முறையும் ஷூட்டிங் நடத்தப்படவில்லை என்றால் இந்தப் படத்தில் நான் நடிக்கமாட்டேன் என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவசர அவசரமாக படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டது. ஏப்ரல் 24ஆம் தேதி அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது.