கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’. இதனை ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கி வருகிறார். கார்த்தி இப்போது ‘பொன்னியின் செல்வன் 2’வின் புரொமோஷனுக்காக பறந்து கொண்டிருக்கும் நிலையில் ‘ஜப்பான்’ பட நிலவரம் குறித்து விசாரித்தேன்.
”ராஜுமுருகன்இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தை தயாரித்த நிறுவனம் தான் ‘ஜப்பான்’ படத்தையும் தயாரித்து வருகிறது. கார்த்தியின் ஜோடியாக அனு இமானுவேல், ‘புஷ்பா’ சுனில் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தூத்துக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் கொடைக்கானலிலும் நடந்தது. இதுவரை 50 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அடுத்த ஷெட்யூலுக்காக வட இந்திய பகுதிகளுக்கு கடந்த மாதமே செல்ல வேண்டியது. ஆனால், திடீரென ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு வெளிநாட்டில் நடப்பதால்,
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் அதில் இருக்க வேண்டிய சூழல் உருவானது.
‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து கார்த்தியும், ரவிவர்மனும் நெருங்கிய நட்பில் இருக்கின்றனர். அந்த நட்பில் ‘ஜப்பான்’ படத்தில் இன்னும் இறுக்கமானது. இதனால் ‘இந்தியன் 2’வை ரவி வர்மன் முடித்துவிட்டு வந்த பிறகு ‘ஜப்பான்’ படப்பிடிப்பை தொடரலாம் என கார்த்தியும் முடிவெடுத்துவிட்டார். இந்த இடைவெளியில் தேதிகளை வீணடிக்காமல், உடனடியாக நலன் குமாரசாமியின் படத்தையும் தொடங்கிவிட்டார். அதன் படப்பிடிப்பும் சில நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது வெளிநாட்டில் இருந்து ரவி வர்மன் வந்துவிட்டார்.
‘பொன்னியின் செல்வன்2’ புரொமோஷனில் இருக்கும் கார்த்தி, ஏப்ரல் 28க்கு பின் உடனடியாக ‘ஜப்பான்’ படப்பிடிப்பிற்காக வட இந்தியா கிளம்பவிருக்கிறார். ‘ஜப்பான்’ படத்தை முதலில் பொங்கலுக்கு கொண்டு வரும் திட்டத்தில் இருந்தனர். அதன் பின், ஆயுத பூஜைக்கு கொண்டு வந்துவிடலாம் என முடித்தனர். இப்போது விஜய்யின் ‘லியோ’ (அக்டோபர் 19ம் தேதி) ஆயுத பூஜைக்கு வருகிறது. என்பதால் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரலமா என எண்ணினர்.
ஆனால், அன்று தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ வெளி வரும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு சூர்யாவின் ‘கங்குவா’ படமும் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருப்பதால், ‘ஜப்பான்’ ரிலீஸ் குறித்து ஜூனில் அறிவிப்பார்கள் என்கிறார்கள்.