கேரள மாநிலத்தில் கொச்சியில் வாட்டர் மெட்ரோ திட்டம் சுமார் 747 கோடி ரூபாய் செலவில் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வாட்டர் மெட்ரோ படகு மூலம் ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பத்து தீவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் பஸ், ஆட்டோ, கார் ஆகியவைகளில் பயணிப்பது போன்று படகிலும் பயணிக்கச் செய்யும் வகையில் வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. வைற்றில மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் வாட்டர் மெட்ரோ ஸ்டேஷனைத் திறந்து வைத்தார்.
இப்போது வாட்டர் மெட்ரோ படகு சேவையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். மெட்ரோ ரயில் போன்று முழுவதும் குளிரூட்டப்பட்ட 78 படகுகள் இயக்கப்பட உள்ளன. இவை 38 நிலையங்களில் நின்று செல்லும்.
முதற்கட்டமாக கொச்சி ஐகோர்ட் படகு நிலையத்தில் இருந்து வைப்பின் பகுதிக்கு படகு இயக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏப்ரல் 26-ம் தேதி காலை 7 மணி முதல் பொதுமக்கள் பயணிக்கலாம். ஏப்ரல் 27-ம் தேதி வைற்றில முதல் காக்கநாடு வரையிலான பாதையில் காலை 7 மணி முதல் படகு இயக்கப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை படகுகள் இயக்கப்படுகின்றன. பீக் அவரில் ஐகோர்ட் முதல் வைப்பின் பகுதிக்கு இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு படகு இயக்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்துதான் மற்ற சமயங்களில் படகு இயக்கும் கால அட்டவணை தயாரிக்கப்படும். நூறு பயணிகள் செல்லும் வகையில் 8 படகுகள் இப்போது தயார் நிலையில் உள்ளன. 50 பயணிகளை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகளும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து கொச்சி வாட்டர் மெட்ரோ அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், “வாட்டர் மெட்ரோ படகில் பயணிக்க குறைந்த பட்ச கட்டணமாக 20 ரூபாயும், அதிகபட்ச கட்டணமாக 40 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொச்சி ஐகோர்ட் முதல் வைப்பின் பகுதிவரை பயணிக்க 20 ரூபாய் டிக்கட்டும், வைற்றில முதல் காக்கநாடு வரை பயணிக்க 30 ரூபாய் டிக்கெட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திறப்புவிழாவை முன்னிட்டு சலுகை விலையில் சீசன் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாட்டர் மெட்ரோ படகில் ஒரு வாரத்துக்கான பாஸ் 180 ரூபாயும், ஒரு மாதத்துக்கான பாஸ் 600 ரூபாயும், மூன்று மாதத்துக்கான பாஸ் எடுக்க 1500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தண்ணீருக்குக் கெடுதல் விளைவிக்காத மின்சார மோட்டார், தண்ணீரால் பழுதடையாத ஃபைபர் மெட்டீரியலில் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக படகும், படகு தளங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயண டிக்கெட்டுகளை வாட்டர் மெட்ரோ டெர்மினல்களில் உள்ள கவுண்டர்களில் வாங்கிக்கொள்ளலாம். அதுபோன்று கொச்சி மெட்ரோ ரயிலில் பயணிக்க பயன்படுத்தப்படும் கொச்சி ஒன் கார்டு பயன்படுத்த்தியும், கொச்சி ஒன் ஆப் கியூ ஆர் கோர்ட் பயன்படுத்தியும் டிக்கெட் எடுத்து படகில் பயணிக்கலாம். வெள்ளம் அதிகரிக்கும்போதும், குறையும்போதும் ஒரே சீராக பயணிக்கும் வகையில் மின்சார பேட்டரியில் இயங்கும் வகையில் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தி, பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக படகில் கண்ட்ரோல் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.