கொஞ்ச காலமாக பிரச்சனைகளில் சிக்கியிருந்த விஷால் இப்போது யோசித்து சில முடிவுகளை எடுத்திருக்கிறார். லைக்காவுடனான பிரச்னைகளை பேசித்தீர்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அவரது சொந்த கம்பெனியான VFFன் மூலம் படங்கள் தயாரிப்பதை இப்போதைக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துவிட்டார். சில முன்னணி இயக்குநர்களை அணுகி அவசரம் இல்லாமல் தனக்கான கதைகளைத் தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி அணுகும் போது தான் அதற்கு முன்பாக தன் கம்பெனியில் நடித்துக் கொடுக்கும்படி கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக்கொள்ள உடனே சம்மதித்து விட்டார்.
ஏற்கனவே டைரக்டர் ஹரியிடம் சூர்யா ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். ஹரி சொன்ன கதையில் சில திருத்தங்களை சூர்யா சொல்ல, அது ஹரிக்கு பொருத்தமாகப் படவில்லையாம். தன்மேல் எப்போதும் போல் நம்பிக்கை வைக்கும்படி ஹரி சொல்லியிருக்கிறார். யோசித்த சூர்யா, பாண்டிராஜ் சொன்ன கதைக்கு அப்போதைக்கு ஷுட்டிங் போய் விட்டார்.
திருப்பிக் கொடுத்த அட்வான்சை கூட சூர்யா வாங்க மறுத்துவிட்டார். அதோடு ஹரி புதிதாக ஆரம்பித்த ஸ்டூடியோவுக்கும் வந்து திறந்து வைத்து அன்பை வெளிக்காட்டினார். சூர்யாவுக்கு சொன்ன கதைகளில் ஒன்றில் தான் விஷால் நடிக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கிறதாம். அதோடு பேமிலி சென்டிமெண்டும் உண்டு.
இனி தொடர்ந்து வெளிப்படங்களில் நடித்து கடன்களை ஒழித்துக் கட்ட விஷால் முடிவெடுத்து விட்டதால் முன்பு விஜய்யிடம் மேனேஜராக இருந்தவரை இப்போது தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் நடிகர் சங்க வேலைகளை கூட நாசர், கார்த்தி பொறுப்பில் விட்டு விட்டார்.
மல்டி ஸ்டார் படத்தில் நடிப்பதற்கு கூட ரெடியாக இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கிடையில் இப்போது படப்பிடிப்புக்கு சரியாக வர ஆரம்பித்திருக்கிறார் விஷால். எல்லாமே சூழ்நிலைகளைப் புரிந்து கொண்ட விளைவு தான் என்கிறார்கள். வந்திருக்கிற புது மேனேஜர் எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்தி செய்வதின் விளைவுதான் என்று அருகில் இருக்கிற நண்பர்கள் சொல்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது விஷால் வாழ்க்கையிலும் வந்திருக்கிறது.