"அவங்கள ஜெயிக்கனும்னா படி".. ஹிஜாப் போராட்ட மாணவிக்கு தந்தை கொடுத்த அட்வைஸ்.. இன்று ஸ்டேட் ஃபர்ஸ்ட்!

பெங்களூர்:
ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கோரி சட்டப்போராட்டம் நடத்திய மாணவிகளில் ஒருவரான தபசும் ஷேக், பியுசி தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

படிப்பா, ஹிஜாப்பா என குழப்பம் வந்த போது படிப்பை தேர்ந்தெடுக்குமாறு தனது தந்தை தந்த அறிவுரையே இன்றைக்கு இந்த சாதனைக்கு காரணம் என அந்த மாணவி தேர்ந்தெடுத்துள்ளார்.

மேலும், படிப்பின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் சமூகத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய முடியும் எனவும் தனது தந்தை கூறியதை உணர்ச்சிகரமாக நினைவுகூர்ந்தார் மாணவி தபசும் ஷேக்.

நாட்டை உலுக்கிய போராட்டம்:
கர்நாடகாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு போராட்டம் இந்தியாவையே உலுக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. இது என்ன கர்நாடகாவா அல்லது வேறு ஏதேனும் வட மாநிலமா என்ரு நினைக்கும் அளவுக்கு அந்தப் போராட்டத்தின் சாராம்சம் இருந்தது. அதாவது, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என வலியுறுத்தி ஒருதரப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்பட, அவர்களை ஹிஜாப் அணிய அனுமதித்தால் தாங்களும் காவி உடையில் கல்லூரிக்கு வருவோம் என அவர்கள் கூறினார்.

சட்டப்போராட்டம் நடத்திய மாணவிகள்:
முதலில், உடுப்பியில் நடைபெற்ற இந்தப் போராட்டம் பின்னர் கர்நாடகா முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பரவியது. இதில் இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதலும் நடைபெற்றது. இதையடுத்து, கல்வி நிலையங்களில் மத அடையாளமான ஹிஜாபை அனுமதிக்க முடியாது என கர்நாடகா பாஜக அரசு உத்தரவிட்டது. இந்த தடையை நீக்கக்கோரி முஸ்லிம் மாணவிகள் சிலர் கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். எனினும், ஹிஜாபுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை.

தந்தையின் அதிரடி அட்வைஸ்:
இதனால் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு முஸ்லிம் மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வாறு ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள், ஒருதரப்பு மாணவர்களால் கிண்டலுக்கு உள்ளாகினர். இதன் காரணமாக, சில முஸ்லிம் மாணவிகள் தங்கள் படிப்பை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹிஜாபுக்காக சட்டப்போராட்டம் நடத்திய மாணவிகளில் ஒருவரான தபசும் ஷேக்கும் தனது படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இதனை தனது தந்தையிடம் சொன்னபோது, அவர் கூறிய வார்த்தைகள் தபசும் ஷேக்கின் வாழ்க்கையையே மாற்றியது.

நீ அதிகாரத்துக்கு வர வேண்டும்:
தபசும் ஷேக்கின் வார்த்தைகளிலேயே இதை பார்க்கலாம். “ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு செல்ல முடியாது என தந்தையிடம் கூறினேன். அதை கேட்ட அவர், என்னை அருகில் அழைத்து, கல்விதான் சரியான பாதை. நீ சமூகத்தில் ஒரு நிலையை அடையவும், உன்னை போல மற்றவர்களை உயர்த்தவும் கல்வி மட்டுமே ஒரே ஆயுதம். இதுபோன்ற அநீதிகள் மீண்டும் சமூகத்தில் நிகழாமல் தடுக்க நீ படிக்க வேண்டும். உன் வார்த்தையை பிறர் கேட்க, நீ அதிகாரத்தில் இருக்க வேண்டும் என எனது தந்தை கூறினார். அவரது வார்த்தைகளால்தான் நான் மீண்டும் கல்லூரி சென்றேன்.

மாநிலத்தில் முதலிடம்:
எனது படிப்புக்காக கல்லூரியில் மட்டும் ஹிஜாப்பை துறந்தேன். வேறு எந்த சிந்தனைகளும் எனக்கு இல்லை. படிக்க வேண்டும்.. அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற வேட்கை மட்டுமே என்னுள் கொழுந்துவிட்டு எரிந்தது. இரவு பகலாக படித்தேன். அதனால்தான் இன்றைக்கு மாநிலத்தில் முதல் மாணவியாக வந்திருக்கிறேன்” இவ்வாறு தபசும் ஷேக் கூறினார். தபசும் ஷேக் பியுசி 2-ம் ஆண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண் 600-க்கு 593.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.