ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியில் முக்கியமான ஒருவர் பாலேஷ் தன்கர் (43). இவர் ‘ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் தி பிஜேபி’ எனும் வெளிநாட்டு பா.ஜ.க உறுப்பினர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகச் செயல்பட்டவர். இவர் மீது 2018-ம் ஆண்டு பெண்களுக்குப் போதைமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாடு முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாலேஷ் தன்கர் மீது ஆஸ்திரேலியாவில் 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடரப்பட்டு, நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலேஷ் தன்கர் கொரியப் பெண்கள் மீது வெறித்ததுமான மோகத்திலிருந்ததாகவும், கொரிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பு செய்வதற்குப் பெண்கள் வேண்டும் என்ற விளம்பரம் மூலம் கொரியப் பெண்களைக் கவர்ந்து, அவர்களிடம் நெருக்கமாகி விருந்துக்கு வரவழைப்பதும் அவர்களுக்குக் குடிக்கக் கொடுக்கும் பானத்தில் போதைப் பொருளைக் கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
மேலும், அதைத் தனது படுக்கை அறையிலிருந்த அலாரம் கடிகாரத்தில் பொருத்தப்பட்ட கேமராவிலும், தனது செல்போனிலும் பதிவு செய்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீடியோக்களை ஒவ்வொரு பெண்ணின் பெயரில் தனித்தனியாக 47 ஃபைல்களாக தனது கணினியில் சேமித்து வைத்ததும் தடயவியல் நிபுணர்களால் கண்டறிந்தனர் என இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி சார்ஜென்ட் கத்ரீனா கைட் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாள் “சிட்னியின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமையாளரில் பாலேஷ் தன்கரும் ஒருவர்” எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது. இந்த நிலையில், மேலும் 5 கொரியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோவை காவல்துறை மீட்டிருக்கிறது. இந்த வழக்கில் பாலேஷ் தன்கருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், “பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் அனைவரும் முழு சம்மதத்துடன்தான் அவருடன் உறவிலிருந்தார்கள்” என வாதிட்டார்.
ஆனால், ‘வீடியோவில் இருக்கும் பெண்கள் அந்த உறவை வெறுக்கும் விதத்தில் தவிர்க்க முயன்றது தெரிகிறது’ என நீதிமன்றம் அந்த வாதத்தை ஏற்க மறுத்தது. இந்த வழக்கு குறித்த விசாரணை நேற்று மீண்டும் நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது, ஜூரி ஃபோர்மேன் பாலேஷ் தன்கருக்கு எதிரான 39 குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிலும் அவர் குற்றவாளி என்று உறுதிப்படுத்தியது. பாலேஷ் தன்கர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கண்ணீருடன் முறையிட்டார். ஆனால் அவரின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி மைக்கேல் கிங். அதைத் தொடர்ந்து, பாலேஷ் தன்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் அவருக்கான தண்டனை குறித்து அறிவிப்பு வரவில்லை என்பதால் வரும் மே மாதம் மீண்டும் நீதிமன்றத்தை எதிர்கொள்வார் என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.