புதுடில்லி: கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்த உத்தரவை வரும் மே 9ம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ல் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் பெருவாரியான சமூகமாக பார்க்கப்படும் லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினரின் ஓட்டுகளை கவர்வதற்காக இம்மூன்று கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் ஆளும் பா.ஜ., அரசு, இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதனை லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினருக்கு தலா 2 சதவீதமாக பிரித்து வழங்க உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியோ, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் ஒருவரே முதல்வராக அமர்த்தப்படுவார் எனக் கூறியது. இதனால், இந்த கட்சிகள் லிங்காயத்து, ஒக்கலிகா சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாக பிரசார வியூகம் வகுக்க பா.ஜ., திட்டமிட்டது. இதற்கிடையே இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை வரும் மே 9ம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் வரை இதனை அமல்படுத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதால், இந்த விவகாரத்தை வைத்து ஓட்டு வங்கியை குறிவைத்த பா.ஜ.,விற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றிப்பெற்றால் இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் அல்லது மாறாக காங்கிரஸ் அல்லது மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கலாம். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தேர்தலில் எப்படி பிரதிபலிக்க போகிறது என்பது மே 13 ஓட்டு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement