கோல்கட்டா, ‘அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு முன், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டியது மிகவும் அவசியம்’ என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தனர்.
‘லோக்சபா தேர்தலில் தங்களின் பிரதமர் வேட்பாளர் யார் என இவர்களால் கூற முடியாது. இவர்கள் எத்தனை முறை சந்தித்தாலும் எந்த பயனும் இல்லை’ என, பா.ஜ.,வினர் கிண்டலடித்து உள்ளனர்.
லோக்சபாவுக்கு, அடுத்தாண்டு மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பல தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த மாதத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.
இதுபோன்ற ஒரு முயற்சியில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். மம்தா பானர்ஜியை அவர் நேற்று மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் சந்தித்து பேசினார். அப்போது, பீஹார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்கு பின், மம்தா பானர்ஜி கூறியதாவது:
அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வெல்வதற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். கடந்த ௧௯௭௦களில் ஜெயபிரகாஷ் நாராயண் இதுபோன்ற முயற்சியை பீஹாரில் இருந்து துவக்கினார்.
அதுபோல, தற்போதும் பீஹாரில் அனைத்து கட்சிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, நிதிஷ் குமாரிடம் கோரியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
”தங்களை சுயவிளம்பரபடுத்தி கொள்வதிலேயே மத்தியில் ஆளும் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. அவர்களிடம் இருந்து நாட்டை மீட்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இருக்க வேண்டும்,” என, நிதிஷ் குமார் கூறினார்.
”கடந்த ௨௦௧௪, ௨௦௧௯ லோக்சபா தேர்தல்களின்போதும், இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அது பலனளிக்கவில்லை. தற்போதும் அதுபோல தேவையில்லாமல் தங்களுடைய நேரத்தை இந்தத் தலைவர்கள் வீணடித்து வருகின்றனர்.
”இவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியுமா,” என, மேற்கு வங்க பா.ஜ., செய்தித்தொடர்பாளர் சாமிக் பட்டாச்சாரியா கூறினார்.
நேற்று மாலை உத்தர பிரதேச மாநிலம் லக்னோவுக்கு சென்ற நிதிஷ் குமார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்