ஐஏஎஸ் அதிகாரி கொலை வழக்கில் விடுதலை ஆகிறார் முன்னாள் கேங்ஸ்டர் ஆனந்த் மோகன் – பிஹாரில் புதிய சர்ச்சை

பாட்னா: ஐஏஎஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்த முன்னாள் கேங்க்ஸ்டரும், முன்னாள் எம்.பி.யுமான ஆனந்த் மோகன் விடுதலையாகிறார். ராஜ்புட் சமூகத்தைச் சேர்ந்த அவர் இப்போது விடுவிக்கப்படுவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஹாரில் கணிசமான வாக்குவங்கி கொண்ட அச்சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும், தேர்தல் ஆதாயத்திற்காக சிறை சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதன்மூலம் ஆனந்த் மோகன் விடுதலையாக வழிவகுத்துக் கொடுத்துள்ளார் முதல்வர் நிதிஷ் குமார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

யார் இந்த ஆனந்த் மோகன்? – 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜி.கிருஷ்ணய்யா என்ற ஐஏஎஸ் அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். அவர் கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவருடைய சொந்த ஊர் இப்போது தெலங்கானாவில் உள்ள முஷாஃபர்பூர். இந்நிலையில், 1994-ஆம் ஆண்டு டிசம்பர்-5 ஆம் தேதி ஜி.கிருஷ்ணய்யா ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையின் மூளையாக செயல்பட்டதாக மோகன் ஆனந்த் கைது செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் பிரபல ரவுடியாக இருந்த மோகன் ஆனந்த் தன் அரசியல் செல்வாக்கால் எம்.பி. ஆனார்.

இந்நிலையில், அவர் மீது நடைபெற்றுவந்த கொலை வழக்கில் கடந்த 2007-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடமையைச் செய்த ஐஏஎஸ் அதிகாரியை கும்பலை ஏவி கொலை செய்த குற்றத்திற்காக மோகன் ஆனந்திற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. பின்னர், அவர் மேல்முறையீடு செய்ய 2008 டிசம்பரில் பாட்னா ஐகோர்ட் அந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அதனையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மோகன் மேல்முறையீடு செய்ய அந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து 2007-ஆம் ஆண்டிலிருந்து மோகன் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில், பிஹார் அரசு நேற்று பிஹார் சிறை சட்டம் 2012-ல் சில திருத்தங்களைக் கொண்டுவந்து அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி ஏற்கெனவே இருந்த ஒரு விதியை திருத்தியது. ஓர் அரசு அதிகாரியை அவர் பணியிலிருக்கும்போது கொலை செய்வது தண்டனைக் குறைப்புக்கு எந்தச் சூழலிலும் கருத்தில் கொள்ளப்படமாட்டாது என்ற விதி திருத்தப்பட்டது. இதனால், ஆனந்த் மோகனின் பெயர் அண்மையில் பிஹார் அரசு வெளியிட்ட மன்னிப்புக்குத் தகுதியான 27 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆனந்த் மோகன் விடுதலையாகும் சூழல் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே மகனின் திருமணத்திற்காக பரோலில் வந்துள்ள ஆனந்த் மோகன், ‘நான் ஏற்கெனவே 15 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டேன். என் நன்னடைத்தைக்காக என்னை விடுதலை செய்கின்றனர். நான் என் மகனின் திருமண வைபவங்கள் முடிந்ததும் மீண்டும் சிறைக்குச் சென்றுவிடுவேன். பின்னர் விடுதலைக்கான உத்தரவு வந்ததும் வெளியில் வருவேன். என் விடுதலைக்கு நிதிஷ் குமார் அரசு அழுத்தம் கொடுத்தது என்றெல்லாம் பேசுபவர்கள் பேசுவார்கள். அவர்கள் எல்லோரும் குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிக்கப்பட்டதற்கும் நிதிஷின் அழுத்தம்தான் காரணம் என்றுகூட பேசுவார்கள்’ என்றார்.

மாயாவதி கண்டனம்: “ஆனந்த் மோகனை விடுதலை செய்வதற்காக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் சிறைத்துறை சட்டங்களில் திருத்தம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. பிஹார் அரசின் முடிவு நாடு முழுவதும் தலித் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. கிருஷ்ணய்யா ஒரு நேர்மையான அதிகாரி. பட்டியலினத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரியை கொலை செய்தார் மோகன் ஆனந்த். அவரது விடுதலை அதிர்ச்சியளிக்கிறது” என்று மாயாவதி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.