கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும். இந்த மேஜிக் நம்பருக்காக பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிரமாக களமாடி வருகின்றன.
நேற்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதிகள் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நட்சத்திர வேட்பாளர்கள் மோதும் தொகுதிகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதில் 5 தொகுதிகளை இங்கே காணலாம்.
வருனா
மைசூரு மாவட்டம் வருனா தொகுதியில் பாஜக சார்பில் வி.சோமன்னா, காங்கிரஸ் சார்பில் சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் பாரதி சங்கர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதி உருவாக்கப்பட்டதில் இருந்து காங்கிரஸ் வசமே இருந்து வருகிறது. இரண்டு முறை சித்தராமையா, ஒருமுறை யதிந்திரா சித்தராமையா வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மீண்டும் களமிறங்கியுள்ளார். மறுபுறம் பாஜகவை சேர்ந்த சோமன்னா போட்டியிடும் இரண்டு தொகுதிகளில் (சாம்ராஜ் நகர்) வருனாவும் ஒன்று. சித்தராமையாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கட்சி மேலிடத்தின் உத்தரவின்கீழ் சோமன்னா களமிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இம்முறை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால் சித்தராமையாவின் வெற்றியும் மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஹூப்ளி-தர்வாத் சென்ட்ரல்
2008, 2013, 2018 என மூன்று முறையும் பாஜகவின் ஜெகதீஷ் ஷெட்டர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இவர் முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை பாஜகவில் சீட் கிடைக்காத விரக்தியில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சீட் வாங்கியுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மகேஷ் தெகினாகை, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் சித்தலிங்கேஷ் கவுடா ஒடேயார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தொகுதியில் ஷெட்டரை வீழ்த்துவது மிகவும் கடினம் எனச் சொல்லப்படுகிறது. மூத்த தலைவர், லிங்காயத்து சமூகத்தின் முக்கியப் புள்ளி, பாரம்பரிய செல்வாக்கு எனப் பல்வேறு விஷயங்கள் சாதகமாக காணப்படுகிறது. இத்தகைய சூழலில் ஷெட்டரை வீழ்த்தி தனது அரசியல் வாழ்க்கை விஸ்வரூபமாக்க மகேஷ் தெகினாகை தீவிரம் காட்டி வருகிறார்.
சன்னபட்னா
கர்நாடக மாநிலத்தின் தொடக்கக் கால தொகுதிகளில் ஒன்று. 1951 முதல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ், ஜனதா கட்சி, பாஜக, சமாஜ்வாதி, ஜனதா தள், சுயேட்சைகள் எனப் பலர் வெற்றி பெற்றி பெற்றுள்ளனர். கடைசியாக நடந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இவர் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் சன்னபட்னா தொகுதியில் இறங்கியுள்ளார்.
இவரை எதிர்த்து பாஜக சார்பில் சி.பி.யோகேஸ்வர், காங்கிரஸ் சார்பில் கங்காதர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 4 முறை கட்சி மாறிவிட்ட பாஜகவின் யோகேஸ்வருக்கு இது அக்னி பரீட்சையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. மற்றபடி குமாரசாமிக்கு சாதகமாக களம் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
அதானி
இது 1952 முதல் சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக நடந்த இரண்டு தேர்தல்களில் மகேஷ் குமதள்ளி வெற்றி பெற்றார். அதில் ஒருமுறை காங்கிரஸ், ஒருமுறை பாஜக கட்சி சார்பில் களமிறங்கியிருந்தார்.
இம்முறை பாஜக சார்பில் மகேஷ் குமதள்ளி, காங்கிரஸ் சார்பில் லக்ஷ்மண் சவாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் சசிகாந்த் படசலிகி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் வெற்றி பெறுவது பாஜகவின் ரமேஷ் ஜர்கிஹோலி மற்றும் காங்கிரஸின் சவாதி இடையிலான ஈகோ போட்டியாக மாறியுள்ளது. தனது ஆதரவாளரான குமதள்ளியை களமிறக்கி ரமேஷ் ஜர்கிஹோலி தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறார்.
பெல்லாரி
கிட்டதட்ட நான்கு முனை போட்டியாக பல்லாரி மாறியுள்ளது. பாஜக சார்பில் சோமசேகர் ரெட்டி, காங்கிரஸ் சார்பில் பாரத் ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் அனில் லாட், கர்நாடகா ஜனதா பக்ஷா கட்சி சார்பில் அருணா லக்ஷ்மி ரெட்டி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் நான்கு பேருமே செல்வாக்கு பெற்ற தலைவர்கள்.