புதுடில்லி :’குட்கா’ உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணையை செயல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து, தமிழக அரசு, ௨௦௧௮ல் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது போன்ற தடை விதிக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, அந்த அரசாணையை செயல்படுத்த தடை விதித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்தினா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, குட்கா விற்பனையாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ”உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இதுபோன்ற தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.
”சட்டத்தை மீறினால், அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை மட்டுமே மாநில அரசு எடுக்க முடியும்,” என, குறிப்பிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ”புற்றுநோயை உருவாக்கும் இதுபோன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. மக்களின் பொது சுகாதாரத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம், பொறுப்பு உள்ளது,” என, வாதிட்டார்.
இதையடுத்து அமர்வு கூறியுள்ளதாவது:
தமிழக அரசின் வாதம் ஏற்கக் கூடியதாக உள்ளது. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்கும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.
இதனால் தங்களுக்கு பாதிப்பு என்று நினைத்தால், இந்தப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் உரிய அமைப்பை நாடலாம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement