ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸ், குழந்தைகளுக்கு கண்ணில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதற்கான அபாயம் இருப்பதாக, இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் நாட்டில் சமீப நாள்களாக கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. கோவிட் பரிசோதனைகளை அதிகரித்து, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸானது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் தொடர்பான நோய்த் தொற்றுகளையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம் என சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி முதல், 16-ம் தேதி வரை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில், வெளிநோயாளிகள் பிரிவில் இருந்த 25 குழந்தைகளை உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு பிரிவின் உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் வசிஷ்டா ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளே, ஒமிக்ரான் வைரஸின் மற்றொரு திரிபான XBB.1.16 வைரஸால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 42.8 சதவிகிதம் குழந்தைகளுக்கு கண்களில் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் இருந்தது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இதனால் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்கவோ, தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமோ இல்லை. இவ்வகை வைரஸால் குழந்தைகளுக்கு ஒன்று முதல், மூன்று நாள்கள் வரை காய்ச்சல் இருக்கலாம். 25 குழந்தைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பிறந்து 13 நாள்களே ஆன குழந்தையைக் கூட இத்தொற்று பாதித்திருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது” என்றார்.