சென்னை அருகேயுள்ள குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதீஷ் (29). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார். தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை இவரின் அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில்(22) ஆகிய இருவரும் அதீஷிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது ஆத்திரமடைந்த சுகாஷ், சுனில் ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதீஷை வெட்ட முயன்றனர்.
அதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க, அதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், விடாமல் துரத்தியவர்கள் அதீஷை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தனர். அப்போது அதீஷைக் காப்பாற்ற வந்த அவரின் அண்ணன்களான முரளி (33), சுகுமார் (38) ஆகிய இருவருக்கும் வெட்டு விழுந்தது. அதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கொண்டு செல்லும் வழியில் அதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். உயிரிழந்த அதீஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது.
இது குறித்து போலீஸார் பேசுகையில், “அதீஷின் தந்தை தங்கமணிக்கும் சுகாஷ், சுனில் ஆகியோருக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது சுகாஷும், சுனிலும் சேர்ந்து அவர்களின் தாத்தா தங்கமணியை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரவு வீட்டுக்கு வந்த அதீஷ், தன்னுடைய அண்ணன் மகன்களிடம் ஏன் தாத்தாவை அடித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதனால்தான் அதீஷைக் இருவரும் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.
இந்த நிலையில் போலீஸார் தேடிய சுகாஷ், சுனில் ஆகியோர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் இருவரும் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று சித்தப்பா அதீஷ், சுகாஷ், சுனில் ஆகியோர் மது அருந்தியிருக்கிறார்கள். அப்போதுதான் தங்கமணியைத் தாக்கியது தொடர்பான பேச்சு வந்திருக்கிறது. குடும்பத் தகராறில் இந்தக் கொலை நடந்திருப்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.