ஜேர்மனியில் கார் மீது ரயில் மோதியதில் இளம்பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
கார் மீது ரயில் மோதல்
ஜேர்மனியில் ஹனோவர் நகரின் ஏ6 ஆட்டோபேன் பகுதிக்கு அருகே உள்ள நியூஸ்டாட் வடக்கு ரயில்வே கிராஸிங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் கார் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 24 வயது கார் ஓட்டுநர், அதே வயதுடைய இளம் பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவர் என மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
ரயிலில் 42 பயணிகள் வரை பயணித்த நிலையில், அதில் ஒரே ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
ரயில் கார் மீது முழு வேகத்தில் மோதியதால் கார் முற்றிலுமாக சிதைந்தது, மேலும் கார் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
இதனால் அப்பாதை வழியாக சிறிது நேரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மீட்பு பணிகள்
விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் ரயில் பாதையில் இருந்து காரை அப்புறப்படுத்தினர்.
ரயில்வே ஊழியர்கள் டிராக்கை சரி பார்த்தனர்.
விபத்து தொடர்பாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் வழங்கிய தகவலில், விபத்தின் போது ரயில்வே லெவல் கிராஸிங்கில் தடுப்பு வேலி கீழே இறக்கப்பட்டு இருந்துள்ளது.
இருப்பினும் தடுப்பு முழுமையாக சாலையை மூடாததால், இந்த இடைவெளி வழியாக கார் வேகமாக நுழைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.