சென்னை: தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என 4 மாநிலங்களில் 50 இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
‘ஜி ஸ்கொயர் குரூப்ஸ்’ குழும நிறுவனங்களில் ஒன்றான ‘ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ்’ நிறுவனம் கட்டுமானம் மற்றும் நில விற்பனை தொழிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்களில் இந்நிறுவனம் செயல்படுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகம், ஆழ்வார்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை உட்பட பல்வேறு இடங்கள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். எம்எல்ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். எம்எல்ஏ காருக்குள்ளும் சோதனை நடத்தப்பட்டது.
கோவை அவிநாசி சாலை, பீளமேட்டில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகம், புளியகுளத்தில் உள்ள கார்த்திக்கின் உறவினர் வித்யாசாகர் ராமதாஸ் என்பவரது வீடு, திருச்சியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடந்தது. இதேபோல, ஓசூர், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத் என சுமார் 50 இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.