தூத்துக்குடி மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் நடைபெற்று இன்றோடு 130 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சிபிசிஐடி போலீசார் 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியதில் நீதிமன்றத்தின் உத்தரவின் படி மனிதக் கழிவின் பகுப்பாய்வின் அடிப்படையில் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 9 நபர்கள், கீழ முத்துக்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு நபர், காவிரி நகரைச் சேர்ந்த ஒரு நபர் என 11 நபர்களுக்கு இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள டிஎன்ஏ ஆய்வகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களின் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒப்பிடப்படும். இந்த டிஎன்ஏ சோதனையில் உட்படுத்தப்பட்ட நபர்களுடன் ஒத்துப் போகாமல் போனால் மேலும் சில நபர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகளை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வேங்கைவயலை சேர்ந்த காவலர் முரளி ராஜா, முத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் காவேரி நகரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை கொடுக்க தற்பொழுது வந்துள்ளனர்.
மீதமுள்ள 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் அளிக்க புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வராமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரத்த மாதிரி பரிசோதனைக்காக 11 பேர் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டிருந்த நிலையில் 8 பேர் வரவில்லை.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் சென்னை ஆய்வகத்திற்கு டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கடைசி நேரத்தில் 8 பேர் மருத்துவ பரிசோதனைக்கு வராமல் இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்பட வேண்டிய 8 பேர் எங்கே சென்றார்கள்..? ஏன் ஆஜராகவில்லை..? என சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.