மதுரை: ”திருச்சி மாநாட்டில் மருந்துக்குக் கூட திமுகவை பற்றி விமர்சனம் செய்யவில்லை. அவர்கள் திமுகவின் பினாமி மாநாடு போல நடத்தி முடித்து இருக்கிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் சார்பில் வாடிப்பட்டி அருகே மன்னாடி மங்கலத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன்தலைமை தாங்கினார். இந்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியது: “தேர்தல் ஆணையமும் எடப்பாடியார் பொதுச் செயலாளராக ஆக்கியது செல்லும் என்று தீர்ப்பு வந்த பிறகும் கூட ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கட்சிக் கொடியினை பயன்படுத்தி திருச்சியில் மாநாட்டை நடத்தினர். எதற்காக இந்த மாநாடு? அதிமுகவினர் தங்களுடைய நிரந்தர எதிரியாக திமுகவை பார்க்கிறார்கள். ஆனால், திருச்சி மாநாட்டில் மருந்துக்குக் கூட ஓ.பன்னீர்செல்வம் திமுகவை பற்றி விமர்சனம் செய்யவில்லை. அதேநேரத்தில் திமுகவையும், அதன் அரசையும் பற்றி தினமும் அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தோலுரித்துக் காட்டி வருகிறார்.
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கிரி சுரங்கம் அமைப்பதற்கு முதன் முதலில் எதிர்ப்பை தெரிவித்தவர் கே.பழனிசாமி. அதற்கு பின்பு தான் ஸ்டாலின் விழித்துக் கொண்டார். தற்போது அதை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்யாண மண்டங்களில் மதுபானங்களை அனுமதிக்கலாம், அதேபோல் இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் கூட குடித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த கலாச்சாரத்தை ஒழிக்க அதிமுக எந்த தியாகம் செய்ய தயார் என்று கே.பழனிசாமி அறிவித்தார். உழைப்பாளர்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை என்று இருந்தது. அதற்காக மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதான் உலக சித்தாந்தம். அதை சீரழிக்கும் வகையில் 12 மணி நேரம் மசோதாவை தாக்கல் செய்தனர். இந்த சட்ட மசோதாவை கே.பழனிசாமி எதிர்த்தார். தற்போது அந்த மசோதாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி கே.பழனிசாமி திமுக அரசுக்கு அடுக்கடுக்கான நெருக்கடிகளை கொடுத்து மக்கள் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி வருகிறார். ஆனால், அதிமுக கொடியை கட்டிக்கொண்டு, திமுகவை விமர்சிக்காமல் மாநாட்டை திருச்சியில் நடத்தி உள்ளார். 51 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் இதுபோல் நடந்தது கிடையாது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், திமுக பிரதிநிதி போல வந்து கலந்துக்கொண்டார்கள். அதனால், திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த மாநாடு, திமுகவின் பினாமி மாநாடு போல் நடந்து முடிந்து இருக்கிறது.
கே.பழனிசாமியை வசைபாடுவதற்காகவே அந்த மாநாட்டை அவர்கள் நடத்தியுள்ளனர். கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட அவர்கள் விரக்தின் உச்சத்தில் உள்ளனர். ஆனால் நிதானத்தின் அடையாளமாக கே.பழனிசாமி உள்ளார். ஆகஸ்ட் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கும்” என்று அவர் பேசினார்.