பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்ந்து சர்ச்சையை உருவாக்கி வருகிறது. ஏற்கெனவே பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி இருக்கும்பட்சத்தில் எதற்காகப் புதிதாக ஒரு நிதி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கேள்விக்கு இதுவரையிலும் பதில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பாக எழுப்பப்பட்ட எந்தக் கேள்விகளுக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக அரசு தரப்பு பதில் அளிக்க மறுத்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில் தற்போது பி.எம்.கேர்ஸ் நிதியில் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.2,900 கோடி நன்கொடையாக வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது மேலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் மார்ச் 2020-ல் பிரதமர் நரேந்திர மோடி பி.எம்.கேர்ஸ் நிதியைத் தொடங்கினார். கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிதி அமைப்பின் தலைமை பொறுப்பில் பிரதமர் மோடியும், இந்த அமைப்பின் ட்ரஸ்ட்டிகளாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல முன்னணி திரைப் பிரபலங்களும் இந்த நிதியின் ட்ரஸ்ட்டிகளாக இடம்பெற்றிருந்தனர். பல திரைப் பிரபலங்கள் பி.எம்.கேர்ஸ் நிதி திரட்டுவதற்கான விளம்பரங்களிலும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அலுவலக இணையதளங்களிலும் பி.எம்.கேர்ஸ் நிதி அமைப்பின் கீழ் நன்கொடை திரட்டுவதற்கான விளம்பரங்கள் இடம்பெற்றன.
ஆனால், இதுவரையிலும் பி.எம்.கேர்ஸ் நிதியில் எவ்வளவு நிதி நன்கொடையாகப் பெறப்பட்டிருக்கிறது என்கிற விவரமும், பெறப்பட்ட நிதி எதற்காக எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிற விவரமும் எங்கும் வெளியிடப்பட வில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த நிதி அமைப்பு வராது என்றும் கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறது அரசு தரப்பு. ஆனால், நாட்டின் பிரதமர் தலைமை வகிக்கும் இந்த நிதி அமைப்பு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி அமைப்பு போலவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், அரசு இதற்கு செவிசாய்க்க மறுக்கிறது.
பிரதமர், அமைச்சர்கள் நிர்வாகத்தின் கீழ்தான் இது செயல்படுகிறது. இதற்கான இணையதளமும் gov.in என்ற டொமைன் பெயரில்தான் செயல்படுகிறது. இதற்கான அலுவலகமும் பிரதம மந்திரி அலுவலகத்தில்தான் உள்ளது. பிறகு ஏன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த பி.எம்.கேர்ஸ் நிதி அமைப்பு கொண்டுவருவதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது என்கிற கேள்வி எழுகிறது.
எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாத நன்கொடையாக வரும் பணத்தை என்ன செய்கிறது என்று தெரியாத இந்த பி.எம்.கேர்ஸ் நிதி அமைப்பை எப்படி நம்புவது, எப்படி நம்பி நன்கொடை வழங்குவது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்நிலையில் பொதுத் துறை நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர் நிதியை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது மேலும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. ஏற்கெனவே பிரதம மந்திரி நிவாரண நிதி இருக்கும்போது எதற்காக இன்னொரு நிதி அமைப்பு? ஏன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பி.எம்.கேர்ஸ் நிதியைக் கொண்டுவர அரசு மறுக்கிறது? இதுவரையில் பெறப்பட்ட நன்கொடை எவ்வளவு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற விவரங்களை ஏன் வெளியிட மறுக்கிறது? போன்ற கேள்விகளுக்கு எப்போது அரசும் பிரதமரும் பதில் சொல்ல போகிறார்கள்?