காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
காத்மாண்டுவிலிருந்து துபாய்க்கு fly Dubai Flight 576 எனும் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் நேற்று இரவு 50 நேபாள பயணிகள் உள்பட 150 பேரை ஏற்றிக் கொண்டு துபாய்க்கு விமானம் புறப்பட்டது.
நேபாளத்தின் திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் என்ஜினில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானம் தரையிறங்க தயாரானது. மேலும் தீயணைப்பு சாதனங்களும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டன.
தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இன்றி கோளாறுகள் சரி செய்யப்பட்டு அந்த விமானம் துபாய்க்கு புறப்பட்டுவிட்டதாக அந்நாட்டு போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் வானில் பறக்கும்போதே அந்த விமானம் தீப்பிடித்ததை பார்த்தோம் என்றனர். தற்போது இந்த விமானத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இது தொடர்பான முதல்கட்ட விசாரணையில் பறவை மோதியதால் விமானம் தீப்பிடித்திருக்கலாம் என தெரிகிறது.