புதுடெல்லி: “நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை. அது தெரிந்துதான் நிதிஷ்குமார் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்” என்று பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார், “எனக்குப் பதவி மற்றும் அதிகாரத்துக்கான ஆசையில்லை. என் பணி தேசத்தின் நலனுக்காக செயல்படுவது. எனக்கென்று எதுவும் வேண்டாம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அதன்பின்னர் எல்லோரும் சேர்ந்து பிரதமர் வேட்பாளர் பற்றி கூட்டாக பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் அளித்தப் பேட்டியில், “நாட்டில் பிரதமர் பதவி காலியாக இல்லை.அது தெரிந்துதான் நிதிஷ்குமார் நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
பிஹாரில் அவர் ஆட்சியைப் பிடிக்கவே பாஜக தான் காரணம். எங்கள் உதவியில் அவர் பிஹார் முதல்வரானார். ஆனால் இப்போது மாநிலத்தில் அவருடைய கட்சியின் செல்வாக்கு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சொந்த மாநிலத்திலேயே நிலவரம் இப்படியிருக்க அவர் பிரதமர் கனவு காண்கிறார்” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.