கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அம்மாநிலத்தில் ஆளும் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகத்தினருக்கு தலா 2 சதவீதமாக பிரித்து வழங்கவும் ஆணை பிறப்பித்தது. கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விஷயம், தேர்தலில் வெற்றி பெற பாஜக வகுத்த வியூகம் எனக் கூறப்பட்டது.
சிறுபான்மையின வாக்குகள்
ஏனெனில் சிறுபான்மையின வாக்குகள் என்பது பாஜகவிற்கு எட்டாக்கனி என்றே பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தை கையிலெடுத்த
காங்கிரஸ்
, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்று அறிவித்தது. மறுபுறம் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியினர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர் ஒருவரே முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்படுவார் என்று அதிரடியாக கூறினர். இதற்கிடையில் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள பாஜக திட்டமிட்டது.
லிங்காயத்து, ஒக்கலிகா வாக்குகள்
அதாவது, இந்த இட ஒதுக்கீடு ரத்தை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எதிர்த்தால், அவர்கள் ஒக்கலிகா, லிங்காயத்து சமூகத்தினருக்கு எதிரானவர்கள் எனப் பிரச்சாரம் செய்ய வியூகம் வகுத்திருந்தது. தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. வழக்கம் போல் கிங் மேக்கர் அரசியலுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் அடிபோட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவிட்டுள்ளது. அதாவது, இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை வரும் மே 9ஆம் தேதி வரை அமல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
பாஜகவிற்கு சிக்கல்
லிங்காயத்து, ஒக்கலிகா சமூகத்தினரை முன்வைத்து வாக்கு வங்கி அரசியலை முன்னெடுக்கும் வகையில் பாஜக திட்டமிட்டிருந்த விஷயம் சிக்கலாக மாறியுள்ளது. ஏனெனில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை தொடருமா? நிரந்தரமாக ரத்து செய்யப்படுமா? மீண்டும் கிடைக்குமா? போன்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வகையில் வாக்குகளை அறுவடை செய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
அடுத்தகட்ட நகர்வு
அதேசமயம் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக உத்தரவு வந்திருப்பதாக சுட்டிக் காட்டி காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பிரச்சாரம் செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. அப்படி செய்தால் அது எதிராக வந்து முடிய வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தை அரசியல் கட்சிகள் எவ்வாறு முன்னெடுத்து செல்லப் போகின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.