பிடிஆர் ஆடியோ: ''அவர் ஊர்ல இருக்காரு''.. ''அவர்கிட்டயே கேளுங்க''.. அமைச்சர் மா.சு., பரபர..!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது, சி.ஏ.ஜி ரிப்போர்டின் படி அதிமுக ஆட்சியில் குளறுபடிகள் நடந்ததாக பட்டியிலை வாசித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி ரிப்போர்ட் மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டித்தரும் திட்டத்துக்காக ஊரக வளர்ச்சி துறையில் சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டதால் 2.18 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது மேலும், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீடு வழங்காமல் தகுதி அற்ற பேருக்கு முறைகேடாக வீடு வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். மேலும், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் ஒன்றிய அரசு இந்த திட்டத்துக்காக ஒதுக்கிய 1515.60 கோடி ரூபாயை அதிமுக அரசால் பெற முடியவில்லை என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வு முடிந்த பின்னர் பத்திரிகையாளர்கள் அமைச்சர் பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் மா. சுப்ரமணியன், இரண்டாவது ஆடியோவை நான் இன்னும் கேட்கவில்லை… முதல் ஆடியோவுக்கு அவர் ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். தொழிநுட்பத்தை பயன்படுத்தி புனையப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்றார்.

அப்போது ஆடியோ விவகாரம் குறித்து மீடியாவை ஏன் சந்திக்காமல் உள்ளார் என கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், நான் இங்கு இருக்கிறேன் அதனால் செய்தியாளர்களை சந்திக்கிறேன். அவர் ஊரில் இல்லை, இங்கு வந்ததும் அதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்திக்கலாம் அப்போது அவரிடம் கேள்வி கேளுங்கள் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டிருந்த இரண்டாவது ஆடியோவில், ”பிடிஆர் இரண்டாவது ஆடியோ” என்று தலைப்பிட்டிருந்தார். அதில், இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏகளும் அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர். இதெல்லாம் ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். இப்போது நான் பதவியில் இருந்து விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்” என பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.