பெங்களூரு மெட்ரோ: பையப்பனஹள்ளி டூ கே.ஆர்.புரம் சேவை எப்போது? வெளியான ஹேப்பி நியூஸ்!

தலைநகர் டெல்லிக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ சேவையை கொண்ட நகரமாக பெங்களூரு திகழ்கிறது. இங்கு ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் 25.63 கிலோமீட்டர் தூர பர்பிள் லைன், 30.32 கிலோமீட்டர் தூர கிரீன் லைன் ஆகியவை பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் பர்பிள் லைன் என்பது பெங்களூருவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரு நம்ம மெட்ரோ

கிரீன் லைன் என்பது வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் நாகசந்திரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பர்பிள் லைன் சேவையை பையப்பனஹள்ளியில் இருந்து ஒயிட்பீல்டு வரை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் கே.ஆர்.புரம் முதல் ஒயிட்பீல்டு வரை இரண்டாம் கட்ட திட்டப் பணிகள் விறுவிறுவென நடந்து 13.71 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை கடந்த மார்ச் 25ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பையப்பனஹள்ளி முதல் கே.ஆர்.புரம்

ஆனால் பையப்பனஹள்ளி முதல் கே.ஆர்.புரம் வரையிலான இடைப்பட்ட 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிவடையவில்லை. இதன் காரணமாக பர்பிள் லைன் நீட்டிப்பு என்பது முழுமையாக பெறாமல் இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பெங்களூரு – சேலம் செல்லும் ரயில் வழித்தடம் அமைந்துள்ளது. இதை சரியான முறையில் கடந்து செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டும்.

Purple Line

என்னென்ன சிக்கல்கள்

கே.ஆர்.புரத்தில் பேருந்து பணிமனை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சில திட்டங்கள் பெங்களூரு மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிக்கல்களை தாண்டி வழித்தடம் அமைத்தல், போதிய உபகரணங்கள் பொருத்துதல் உள்ளிட்டவை சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளன. அடுத்தகட்டமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட வேண்டும்.

மெட்ரோ நீட்டிப்பு திட்டம்

இந்த சோதனையில் எல்லாம் சரியாக இருந்தால் பர்பிள் லைன் நீட்டிப்பு திட்டம் முழுமை பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 2.5 கிலோமீட்டர் தூர இணைப்பு சாத்தியமாகி விட்டால் ஒயிட்பீல்டு பகுதியை பெங்களூரு நகரின் பிற பகுதிகளுடன் இணைக்க முடியும். இதையடுத்து ரயில் பயணிகளின் எண்ணிக்கை 3.5 லட்சம் அளவிற்கு அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஜூன் மாதம் வருகிறது

இந்நிலையில் பையப்பனஹள்ளி முதல் கே.ஆர்.புரம் வரையிலான மெட்ரோ சேவை வரும் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பெங்களூரு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக மூன்றாம் கட்ட திட்டத்தில் ஹெப்பல் டூ ஜே.பி.நகர் 4வது பேஸ், ஹொசஹள்ளி டூ கடபகெரே, சர்ஜாபூர் டூ ஹெப்பல் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.