பாகல்கோட் :”முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதமானது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதை கருத்தில் வைத்து லிங்காயத், ஒக்கலிகர், எஸ்.சி., சமுதாயங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், இடஒதுக்கீடு விஷயத்தில் பா.ஜ., அரசு கடந்த மார்ச் 24ம் தேதி முக்கிய முடிவுகளை எடுத்தது.
இதன்படி, எஸ்.சி., பிரிவுக்கான 17 சதவீதம் இடஒதுக்கீட்டை, எஸ்.சி., பிரிவின் வெவ்வேறு சமுதாயங்களுக்கு பிரித்து உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது.
மேலும், ‘2 பி’ பிரிவின் கீழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்காக, கர்நாடகாவில் முகாமிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகல்கோட்டில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது:
கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு அரசியலும் வரும்; மத கலவரங்களும் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சி என்பது பின்னோக்கி சென்று விடும். கர்நாடகாவில் அரசியல் நிலைத்தன்மையை வாக்காளர்கள் தர வேண்டும்.
காங்கிரஸ் கட்சியானது காலாவதியாகி விட்டது. பா.ஜ.,வில் இருந்து செல்லும் தலைவர்களை வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ம.ஜ.த.,வுக்கு ஓட்டு போடுவதும், காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் ஒன்று தான். எனவே, அவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டாம்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் என்பது ஒரு எம்.எல்.ஏ.,வை மட்டும் தேர்ந்தெடுக்கக் கூடியது அல்ல. ஒட்டுமொத்த கர்நாடகா மாநிலத்தின் எதிர்காலத்தையும், இந்த தேசத்தின் பிரதமர் நரேந்திர மோடி கைகளில் ஒப்படைப்பதுதான் கர்நாடகா சட்டசபை தேர்தல்.
எனவே, பா.ஜ.,வை அனைவரும் ஆதரிக்க வேண்டும். கர்நாடகாவை புதிய பாதையில் பயணிக்க வைக்க, பா.ஜ.,வால் மட்டுமே முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் ஊழல் பெருகிவிடும். சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலையை எடுப்பர்.
இடஒதுக்கீடு என்பது, மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இதனால் தான் முஸ்லிம்களுக்கான 4 சதவீதம் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. ஓட்டு வங்கி அரசியலுக்கு அடிபணியாமல் பா.ஜ., அரசு இதை துணிச்சலுடன் செய்தது.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதமானது. எந்த கட்சியும் அரசியலமைப்பிற்கு விரோதமான வேலையை செய்ய முடியாது என உறுதியாக நம்புகிறேன்.
‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம் இடஒதுக்கீடு மீண்டும் அமல்படுத்தப்படும்’ என்று அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர். எனவே, அந்த கட்சியை ஆட்சிக்கு வர விடக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்