கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வன்முறை வெடித்தது. இதில் காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் தான் வடக்கு தினஜ்பூரில் உள்ள கலியாகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.
கடந்த வியாழக்கிழமை மாணவி டியூசனுக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். இரவில் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் மறுநாள் காலையில் சிறுமி கால்வாய் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இறந்த மாணவியின் உடலை போலீசார் தரையில் இழுத்து சென்றதாக வீடியோ வெளியானது.
இதையடுத்து குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அதாவது இன்று காலையில் எஸ்பி அலுவலகத்தின் அருகே மாணவியின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கலியாகஞ்ச் போலீஸ் நிலையத்துக்கு இன்று மாலையில் சென்ற சிலர் அங்கு தீவைத்துவிட்டு சென்றனர். இதில் போலீஸ் நிலையம் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.