விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவாலியர்கள் தினசரி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த பெண் ஒருவர், பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணியாற்றும் டெக்னீஷியன் ஒருவர், பயிற்சி பெண் மருத்துவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இது குறித்து பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் டாக்டர்கள் லலிதா ஷாஹீரா பானு, அமுதா, கீதா, சித்ரா ஆகியோர் பாலியல் புகார் தொடர்பாக பயிற்சி பெண் மருத்துவர் மற்றும் புகாருக்குள்ளான லேப் டெக்னீஷியனிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பயிற்சி பெண் மருத்துவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. இது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணியிடம் கேட்டபோது, “பாலியல் தொந்திரவு கொடுத்த லேப் டெக்னீஷியனைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவரைப் பணிநீக்கம் செய்வதற்கும் துறைரீதியாக கடிதம் எழுதியிருக்கிறேன்” என்றார்.