வேங்கைவயல் விவகாரம்.. டிஎன்ஏ பரிசோதனைக்கு வராமல் அடம்பிடிக்கும் 8 பேர். நெருங்க தயாராகும் சிபிசிஐடி!

புதுக்கோட்டை:
வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனை இன்று நடைபெற்ற நிலையில், அதில் 8 பேர் பங்கேற்க வராதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் சேகரிக்கப்படும் குடிநீரையே இந்த மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் பலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் பயன்படுத்தி வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குடிநீரில் மனிதக்கழிவு:
அப்போது, அந்தக் குடிநீரில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிலர் வேண்டுமென்றே இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. ஜாதி வெறுப்பு காரணமாக இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி வழக்கு பதிவு செய்தது.

11 பேர் மீது சந்தேகம்:
குடிநீர் தொட்டியில் கலந்திருக்கும் மனிதக் கழிவை அறிவியல் கூடத்தில் சோதனை செய்த போது, அது இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடலில் இருந்து வெளியேறிய கழிவு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரையில், 100-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் சந்தேகத்துக்கு இடமாக 11 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

டிஎன்ஏ பரிசோதனை:
இதற்கிடையே, டிஎன்ஏ சோதனையை நடத்தி அந்தக் கழிவு யாருடையது என்பதை கண்டறிய சிபிசிஐடி முடிவு செய்தது. இதற்கு நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டது. இந்நிலையில், இந்த டிஎன்ஏ சோதனைக்காக ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணி வேங்கைவயல் கிராமத்தில் இன்று நடைபெற்றது.

வராத 8 பேர்:
அப்போது ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட பயிற்சி காவலர் முரளி ராஜா உள்ளிட்ட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளை கொடுத்துச் சென்றனர். மீதமுள்ள 8 பேர் இந்த சோதனைக்கு வரவில்லை. அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர். ஒருவேளை, அப்போதும் அவர்கள் வரவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.