திருவாரூர் : தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனக்கு 2 மாநில ஆளுநர் பதவி கிடைத்ததற்கு மகாபெரியவர் அளித்த மாங்கனியே காரணம் என்கிற ரீதியில் பேசியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு திருவாரூர் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இசை விழாவை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “கல்யாணி, சஹானா ஆகிய ராகங்களைப் பாடிக்கொண்டே இருந்தால் வெகுவிரைவில் நோயாளிகள் குணமடைந்து விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல காசநோயை குணப்படுத்தவும் ராகம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஜாய்ஜலவந்தி ராகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தால் காசநோய் குணமாகிறது என்று சொல்கிறார்கள்.
என்னையும், எனது கணவரையும் அழைத்து மகாபெரியவர் கையில் மாங்கனிகளைக் கொடுத்தார். அந்த மாங்கனி தான் இரண்டு மாநில ஆளுநராக பரிணமித்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்” எனப் பேசியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள், ஆளுநர் முதல்வர் உறவு குறித்து கேள்வியை முன்வைத்தனர். அதற்கு தமிழிசை, “முதல்வர்கள் நடந்து கொள்ளக் கூடிய விதத்தைப் பொறுத்துதான் அது அமைகிறது. தெலுங்கானா முதல்வர் எந்தவித புரோட்டோகாலையும் சரிவர பயன்படுத்துவதில்லை. ஆளுநரை மதிப்பதில்லை. என்னை பொறுத்தவரையில் எல்லாம் அரசியல் ஆக்கப்படுவது போல ஆளுநரும் அரசியல் ஆக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.