தென்னந்தியாவில் கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால், மே, 10-ம் தேதி இங்கு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல், நாடு முழுவதிலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால், பா.ஜ.க முகாமில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள், ஸ்டார் பேச்சாளர்களாக களமாடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் முகாமிட்டிருக்கும், இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வார்த்தைப்போர் நிகழ்த்தி வருவதால், தேர்தல் களத்தில் பரபரப்பும் அவ்வப்போது, காமெடி சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
இன்று, மதியம், கர்நாடகா மாநிலம், மைசூர் தொகுதியில், காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி; பா.ஜ.க உள்துறை அமித் ஷா பெல்காம் மாவட்டத்தில், ரோடு ஷோ சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
‘பா.ஜ.க மனசாட்சியின்றி கொள்ளையடிக்கிறது’
மைசூரில் பேசிய பிரியங்கா காந்தி, ‘‘பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு, நாட்டில் பொருள்களுக்கான விலைவாசி கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. பள்ளிக் கல்விக்கட்டணம், மருத்துவக்கட்டணம் என அனைத்தின் விலையும், கட்டணமும் உயர்ந்து, சாமான்ய மக்கள் கடும் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர். மறுபுறம், மோடியின் நண்பர்களான தொழில்துறை நண்பர்கள் அரசின் உதவியைப் பெற்று சம்பாதித்து வருகின்றனர்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்துப் பேசாமல், ‘எதிர்க்கட்சியினர் எனக்கு கல்லறை வெட்டுவதில் குறியாக இருக்கின்றனர்’ என மோடி பேசிவருவது வேடிக்கையாக இருக்கிறது. இந்த நாட்டில் ஒரு பிரதமருக்கு கல்லறை வெட்ட யாரும் நினைக்க மாட்டார்கள்; தேர்தலுக்காக இப்படி பேசுவதை மோடி வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
கர்நாடகத்தைப் பொறுத்தவரையில், 1.5 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தனி ‘ரேட்’ பா.ஜ.க அரசு நிர்ணயித்திருப்பதை கேட்கும்போது, இளைஞர்களுக்கு மாரடைப்பே வருகிறது. 40% பா.ஜ.க அரசு வெட்கமின்றி, மனசாட்சியின்றி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறது.
ஒப்பந்ததாரர் மரணம், போலீஸ் நியமன ஊழல் என அடுக்கிக்கொண்டே போகலாம். கர்நாடக மக்களே… உங்கள் பணத்தை கொள்ளையடிக்கும் பா.ஜ.க அரசை தூக்கி எறிந்துவிட்டு, உங்கள் கலாசாரம், நலன்களைப் புரிந்து உங்களை மேம்படுத்தும் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்,’’ எனக் காட்டமாகப் பேசினார்.
‘ரிவர்ஸ் கியர் காங்கிரஸ்…’
பெல்காம் மாவட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘‘கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கலவரங்கள்தான் அதிகரிக்கும், மக்கள் நிம்மதி இழக்கநேரிடும். தப்பித்தவறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்கூட, இதுவரை இல்லாத அளவில் காங்கிரஸின் ஊழல் உச்சத்தை அடையும். பா.ஜ.க 40% ஊழல் செய்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
இதை நிரூபிக்க ஏன் கோர்ட்டுக்குச் செல்லவில்லை, காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. தற்போது, காங்கிரஸில் இணைந்திருக்கும், முன்னாள் முதல்வர் ஜெகதிஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லட்சுமணன் சவாதியால், காங்கிரஸ் எந்த வகையிலும் பயனடையாது.
முன்னேற்றத்துக்கான ஆட்சியாக, புதிய கர்நாடகத்தை உருவாக்க, மக்கள் ’டபுள் இன்ஜின்’ பா.ஜ.க-வுக்கு ஓட்டுப்போட வேண்டும். ஊழல் செய்யும் ‘ரிவர்ஸ் கியர்’ காங்கிரஸை தவிர்க்க வேண்டும்’’ என காங்கிரஸ் கட்சியைச் சாடிப் பேசினார்.
தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகளிடையே வார்த்தைப்போர் வலுப்பெற்று, அரசியல் களத்தில் அனலை கிளப்பியுள்ளது.