சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஒரு பாடலுக்காக தன்னை நிறையவே திட்டினார்கள் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.
இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.
இரண்டு ஆஸ்கர்களை அள்ளிவந்த தமிழன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
புதுமைகளை புகுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களில் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தும் வழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்கூட பழங்கால கருவிகளை கொண்டு இசையமைத்தார். இப்படி பல புதுமைகளை புகுத்தி வழக்கமான முறையிலிருந்து மீறி இசையமைப்பது அவரது பழக்கம். ஆனால் அப்படி அவர் இசையமைத்த ஒரு பாடல் கடும் சர்ச்சையை சந்தித்தது.

சர்கார் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் சர்கார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. படம் மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும் விமர்சனத்தையே சந்தித்தன. குறிப்பாக சிம்டாங்காரன் என்ற பாடல் புரியவே இல்லை. சர்காரில் பழைய ரஹ்மான் தென்படவில்லை என்றும் ரசிகர்களில் சிலர் கூறினர்.
மனம் திறந்த ரஹ்மான்: இந்நிலையில் அந்தப் பாடல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்திருக்கிறார். அவர் பேசுகையில், “சர்கார் படத்தின் சிம்டாங்காரான் பாடல் வெளியானபோது என்னை நிறையவே திட்டினார்கள். என்னை மட்டுமில்லை அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கையும் திட்டினார்கள். பின்னர் அந்த பாடல் அது 50லிருந்து 100 மில்லியனை யூடியூப் பார்வைகளை பெற்றுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு: அந்தப் பாடல் ‘டண்டனக்கா’ இசையில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதிலிருந்து விலகி செல்லும்போது அந்தப் பாடல் அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அந்த நேரத்தில் அந்தப் பாடலை வெளியிட்டது தவறு என்றே நினைக்கிறேன். சில நேரங்களில் இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்” என்றார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சமீபத்தில் பத்து தல படம் வெளியானது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது.