அஜித் 52 வது பிறந்தநாள் வரப்போகிறது. சோழா பொன்னுரங்கம் அஜித் நடித்த அமராவதியை புதிய பொலிவோடு மே 1-ம் தேதி வெளியிடுகிறார். ரசிகர்கள் ஆவலோடு பெரிய திரையில் பார்க்கக் காத்திருக்கிறார்கள். அஜித்தின் முதல் படமான அமராவதியை இயக்கிய இயக்குநர் செல்வா அவர்களை சந்தித்துப் பேசினோம்.
“அமராவதி படத்திற்கான பாடல்களை ஆரம்பத்திலேயே ரெடி பண்ணிவிட்டோம். அதற்குப் பிறகு படப்பிடிப்புக்கு போகலாம் என்ற எண்ணம். ஹீரோவாக ஒருத்தரை தேர்வு செய்து வைத்திருந்தோம். ஆனால் அவருக்கு கேமராவிற்கு முன்னால் நிற்கும்போது மட்டும் நடுக்கம் இருந்தது. இதுபற்றி எனக்கு அச்சம் இருந்து கொண்டேயிருந்தது அப்படி இருக்கும்போது பாடலைப் பாட எஸ்.பி.பி வந்திருந்தார். அவர் எனது முந்தைய படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார். எஸ்.பி.பி அமராவதி படத்தைப் பற்றி விசாரித்த போது நான் ஹீரோவைப் பற்றிச் சொன்னேன். அவர் உடனே, `தெலுங்கில் பூரண சந்திரராவ் படத்தில் ஒருத்தர் நடிக்கிறார்.
அவர் மயிலாப்பூர்காரர் தான். அங்கே விசாரியுங்கள்’ என்றார். நான் ஆல்பத்தில் அஜித் படத்தைப் பார்த்தேன். கூப்பிட்டுப் பேசினேன். அவரையே ஹீரோவாக ஆக்கிவிட்டு ஊட்டிக்குப் புறப்பட்டு விட்டோம். வசனம் இல்லாமல் முதலில் மான்டேஜ் காட்சிகளாக அவரை இயக்கினேன். அமராவதி காதல் படம். அதற்கு ரொம்பவும் பொருத்தமாக இருந்தார். எல்லா நடிகர்களிடமும் காலையில் நல்லா சாப்பிடுங்க; பிலிம்மை சாப்பிடாதீங்க என்று சொல்வேன். அஜித்திடமும் சொன்னேன். ஒரு டேக்கில் அல்லது இரண்டு டேக்கில் காட்சிகளை ஓகே பண்ணி விடுவார்.
அஜித்தின் கனவு, உலகத்திலேயே பெரிய ரேஸர் ஆகணும் என்று தான் இருந்தது. தொழிலாக அவர் நடித்துக் கொண்டு இருந்தாலும் அவரது தாகம் ரேஸர் ஆகவேண்டும் என்பது மட்டும்தான். அமராவதி நல்ல பெயர் வாங்கியது. கமர்ஷியல் டைரக்டர் என்று உலா வந்தேன்.
37 நாட்களில் படம் முடிந்து விட்டது. அவர் இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என்று நான் உண்மையிலேயே நினைக்கவில்லை. அவரும் அப்படி நினைத்ததேயில்லை என்பதுதான் உண்மை. எப்போதும் ரேஸ் பத்தி தான் பேசிக் கொண்டே இருப்பார்.
இப்போது எங்கேயாவது விமான நிலையங்களில் சந்தித்துக் கொள்வோம். வந்து நலம் விசாரிப்பார். எனது பிறந்த நாளில் அவரது வாழ்த்துச் செய்தி அலைபேசியில் வரும். இன்று அவர் வேறு இடத்திற்கு போய்விட்டார். அவரது ஸ்டார் வேல்யூ அனைத்தும் கூடிவிட்டது. அவரது பிறந்தநாளில் நலமும், சந்தோஷமும் பெருக வாழ்த்துகிறேன்” என்றார் செல்வா.