சென்னை : தமிழில் பாரதி கண்ணம்மா என்ற படத்தின்மூலம் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குநர் சேரன்.
தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் என வெற்றிப் படங்களை இயக்கி தமிழின் முன்னணி இயக்குநராக மாறினார்.
நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள சேரனின் ஆட்டோகிராப் படம் தமிழில் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது.
கன்னடத்தில் ஆட்டோகிராப் படம் இயக்கும் சேரன் : இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் சேரன். புரியாத புதிர், சேரன் செங்குட்டுவன், சூரியன் சந்திரன் போன்ற படங்களில் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சேரன், பாரதி கண்ணம்மா படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படம் 1997ம் ஆண்டில் வெளியானது- சாதி வெறி, ஆணவ படுகொலையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றது.
தொடர்ந்து தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிக்கட்டு, ஆட்டோகிராப் என அடுத்தடுத்த படங்களை ரசிகர்களின் உணர்வுகளுக்கு நெருக்கமாக கொடுத்திருந்தார் சேரன். இதில் ஆட்டோகிராப் படம் தமிழில் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. நான்கு முறை தேசிய விருதுகளையும் 6 முறை தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ள சேரன், இறுதியாக திருமணம் என்ற படத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கினார்.
இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள சேரன், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பதிலிருந்தும் விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் சேரன். ஆனால் தமிழில் இயக்குநராக களமிறங்காமல், கன்னடத்தில் இவர் படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இவரது ஆட்டோகிராப் படத்தை கன்னடத்தில் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் சுதீப் நடிக்கவுள்ளார்.
தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சுதீப். இவர் அடுத்ததாக 3 படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சேரன் இரு படங்களை இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோகிராப் படத்தை மை ஆட்டோகிராப் என்ற பெயரில் சேரன், கன்னடத்தில் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னுடைய வாழ்க்கையில் தான் கடந்து வந்த காதல்களை தன்னுடைய திருமண அழைப்பிதழுடன் மீண்டும் சந்திக்கும் நாயகனின் பயணத்தை கதைக்களமாக கொண்டு உருவான படம் ஆட்டோகிராம். இந்தப் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார் சேரன். இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தின் ஒவ்வொரு நிகழ்வும் படம் பார்ப்பவர்களின் கடந்த காலங்களை நினைவுப்படுத்துவதாக அமைந்தது. படத்தில் ஸ்நேகா கேரக்டர், இதுபோன்ற தோழி நமக்கும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது.