அடுத்தடுத்து இத்தன சம்பவங்களா.. டெரர் ஆக்‌ஷன் வேணும்.. ராமதாஸ் கொதிப்பு.!

ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என

வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘‘நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த சாண்டிநல்லா பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தான் கடத்திச் சென்றதாகவும், அவரது பெயர் விவரம் காவல்துறைக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும், குற்றவாளி கைது செய்யப்படாதது கவலையையும், ஐயத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் காவல்துறை இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். குற்றவாளிகளை தப்பவிட்டுவிடக் கூடாது.

தமிழ்நாட்டில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 4 வயது குழந்தை, அது படிக்கும் பள்ளியின் தாளாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது. ஊட்டி கேத்தி பகுதியில் திங்கள்கிழமை 9 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதன் மூலம் தான் இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்க முடியும். இதை உணர்ந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்!

ஊட்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், ஊட்டி கேத்தியிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலும் கொடியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசு முன்வர வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.