சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டஃப் பைட் தரும் வகையில் பாஜக எம்.எல்.ஏ.வும் பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிடுவது அக்கட்சியில் புதிய பஞ்சாயத்தை கூட்டியுள்ளது.
அரசியல் கட்சிகளில் தலைவர்கள்தான் பொதுவாக அறிக்கை வெளியிடுவது வழக்கம். 2-ம் கட்ட தலைவர்கள் சில நேரங்களில் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவிப்பர். கட்சித் தலைமை அனுமதியுடன் ஊடகங்களை சந்திப்பதும் உண்டு.
தமிழ்நாடு பாஜகவில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு வருகிறார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக மேலிட இணைப் பொறுப்பாளராக இருந்தாலும் தமிழ்நாட்டு விவகாரங்களில் அண்ணாமலையின் அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருகிறது. அவரது கருத்தை முன்வைத்து துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி போன்ற சிலர் சமூக வலைதளங்களில் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பாஜக எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் தமது லெட்டர் பேடில் தனி அறிக்கை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அண்ணாமலை அறிக்கையுடன் வானதி சீனிவாசன் அறிக்கையையும் ஊடகங்கள் பிரசுரம் செய்து வருகின்றன.
திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி, 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக முதல்வருடனான கூட்டணி கட்சித் தலைவர் சந்திப்பு உள்ளிட்ட விவகாரத்தில் வானதி சீனிவாசன் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி விஏஓ படுகொலை தொடர்பாக தனி அறிக்கை வெளியிட்டுள்ளார் வானதி சீனிவாசன்.
வானதி சீனிவாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் – கனிமவளக் கொள்கையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவரது அலுவலகத்திலேயே கொடூரமாக வெட்டி படுகொலை கொல்லப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஏப்ரல் 21-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது திமுக அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்” என்றார்.
ஆனால், அவர் பேசி முடித்த நான்கு நாட்களுக்குள் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர், அவரது அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க. முடியாது. மணல் கொள்ளையை தடுக்க முயன்றதால்தான் கிராம நிர்வாக அலுவலர் கொல்லப்பட்டுள்ளார் என்று வரும் செய்திகள், தமிழகத்தில் எந்த அளவுக்கு மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுல்ளது. இன்றைய காலகட்டத்தில் மணல், கற்கள் போன்ற கனிமங்கள் தங்கத்தைவிட மதிப்பு மிக்கதாக மாறியிருக்கின்றன. எனவே, மணல் உள்ளிட்ட கனிம வளங்களுக்காக எதையும் செய்ய, அந்த வணிகத்தில் உள்ள மாஃபியாக்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் படுகொலையே உதாரணம். மணல் கொள்ளையர்களுடன் அதிகார வர்க்கம் கூட்டணியில் உள்ளது. அதனால் தான், லூர்து பிரான்சிஸ் போன்ற நேர்மையான அரசு அலுவலர்கள் தங்களது உயிரையும் இழக்க நேரிடுகிறது.
கொல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால், இட மாறுதல் கோரி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு மணல் கொள்ளை நடந்து வரும் பகுதியிலேயே பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படுகொலைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். லூர்து பிரான்சிஸை படுகொலை செய்த கொடியவர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும். லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. அதில் கோட்டை விட்டுவிட்டால், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள். இதனை உணர்ந்து சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க, காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் அவருக்கு போட்டியாக அல்லது அவரை முந்திக் கொள்ளும் வகையில் தன்னிச்சையாக வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிடுகிறாரே என்ற புகைச்சல் பாஜகவில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைச்சல் நீண்டகாலமாக இருந்தாலும் இப்போது குமூறலாக வெடித்து கொண்டிருக்கிறது என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.