புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் நிகழும் என அமித் ஷா பேசி இருப்பது வெட்கக்கேடானது, மிரட்டுவது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள டெர்டால் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, “கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் செல்லும். மாநிலத்தில் கலவரங்கள் நிகழும். இந்தத் தேர்தலில் நீங்கள் தேர்வு செய்யப்போவது வெறும் வேட்பாளர்களை மட்டுமல்ல; கர்நாடகாவின் எதிர்காலத்தை” என தெரிவித்திருந்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், ”இது ஒரு வெட்கக்கேடான மிரட்டல் அறிக்கை. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு (ஆர்எஸ்எஸ்-க்கு) விசுவாசமாக இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர், இப்போது மிரட்டல் விடுக்கிறார்.
பாஜகவுக்கு தோல்வி தொடங்கிவிட்டது என்பதாலேயே தேர்தல் பிரச்சாரத்தில் அவர் இவ்வாறு பேசி உள்ளார். இது அமித் ஷாவின் Insult, Inflame, Incite and Intimidate எனும் 4I உத்தியையே காட்டுகிறது. இது அமித் ஷாவுக்கு அவமானம். இந்த விவகாரத்தை நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.