சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 25 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்துக்குள் வெளியிடப்பட உள்ளன.
தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி கடந்த ஆண்டு அக்.11-ம் தேதிவெளியிட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அன்றைய தினமே தொடங்கி, அக்.25-ம் தேதியுடன் முடிந்தது. எம்பிபிஎஸ் படித்த 25 ஆயிரம் மருத்துவர்கள் விண்ணப்பித்தனர். கணினி வழி எழுத்து தேர்வை கடந்த ஆண்டு நவம்பரில் நடத்ததிட்டமிடப்பட்டது. நிர்வாக காரணங்களால் தேர்வை நடத்த முடியவில்லை.
இந்நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் 91 மையங்களில் நேற்று நடந்தது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதி தேர்வும் (10-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் அடிப்படையில்), 2 மணி நேரம் கணினி வழியில் அப்ஜெக்டிவ் (கொள்குறி) வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. காலை, மாலைஎன 2 பிரிவாக தேர்வு நடந்தது.
தேர்வு முடிவுகளை ஒரு மாதத்துக்குள் வெளியிட தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்படுவார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அதிக அளவில் காலி இடங்கள் இருப்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் அங்கு நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க பொதுச் செயலாளர் எம்.அகிலன் கூறியபோது, ‘‘எங்களது தொடர் கோரிக்கையை ஏற்று, தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்த முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், செயலருக்கு நன்றி. அரசுப் பணிக்கு தேர்வாகும் இளம் மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்’’ என்றார்.