இன்று (26) முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை மேல் மாகாணம், உள்ளூராட்சி நிறுவனங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக விசேட வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்தார்.
இன்று (26) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் ‘டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த மேல் மாகாணங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்’ என்ற தலைப்பிலான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இவ்வருடம் 28,446 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடம் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 76,889 ஆகும். இந்த வருடத்தின் சில மாதங்களில் மாத்திரம் குறிப்பிடத்தக்க அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சமூக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.
தற்போது வாரத்திற்கு சுமார் 1800 நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர். அவர்களில் 50மூ மானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வரவிருக்கும் பருவமழையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நிலைமையை உடனடியாக குறைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
களுத்துறை மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும், கம்பஹா மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 25%மானோர் பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆவர். இதற்கமைய, பாடசாலைகளில் டெங்கு நோய் பரவி வருவதால் அது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்தார்.
மேலும், 20-59 வயதுக்குட்பட்டவர்களில் 62ம% மானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு டெங்கு நோயால் 15 பேர் இறந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இன்று ஆரம்பமாகவுள்ள இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில், சம்பந்தப்பட்ட குழுவினர், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலக மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை, கிராம மட்டத்தில் வீடு வீடாகச் சென்று இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.