அகமதாபாத்: கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தில் சாலைகளே உருகிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு கோடைக் காலத்திலும் வெப்பம் முந்தைய ஆண்டை காட்டிலும் உச்சம் தொட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்து வருகிறது.
இதனிடையே கோடை வெயில் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலான ஒரு வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில், அங்கே புதிதாகப் போடப்பட்ட தார் அப்படியே உருகியுள்ளது. அது வாகன ஓட்டிகளின் டயர்களிலும் ஓட்டிக் கொள்கிறது. இதனால் அங்கே வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தார் உருகி டயரில் ஒட்டிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மட்டுமன்றி பாதசாரிகளின் செருப்புகளிலும் இந்த தார் ஒட்டிக் கொள்வதால் நடந்து செல்வோரும் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பொதுவாகத் தார் போட்ட பிறகு அதன் காய அதன் மேல் மணலைப் போடுவார்கள்.
ஆனால், தார் போட்ட உடன் வெப்பம் உச்சத்தில் இருந்ததால், மணலை பிறகு போடலாம் என இருந்துள்ளனர். அப்போது சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்களில் தான் அது ஒட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ டிரெண்டான நிலையில், அதன் பின்னரே தார் மீது மணலை போட்டு அதை உளற வைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை காலத்தில் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கோடைக் காலத்தில் சாலைகள் போட்டுள்ளனர். இருப்பினும், அதீத வெப்பம் காரணமாகத் தாரே மீண்டும் உருகிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக அகமதாபாத்திலும் கடந்த மாதம் சுமார் 1.5 கிமீ சாலை இதேபோல அதீத வெப்பம் காரணமாக உருகியது குறிப்பிடத்தக்கது. கோடை வெப்பம் எந்தளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த வீடியோ இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கூட கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கே கடந்த வாரம் அதிகபட்சமாக வெப்பம் 107 டிகிரி பாரன்ஹூட் வரை கூட சென்றது. ஒவ்வொரு நாளும் தினசரி வெப்பம் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை தொட்டுள்ளது. நேற்று கூட ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹூட்டை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்பம் ஒரு பக்கம் உச்சம் தொட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. கோடை வெப்பத்திற்கு இது இதமாகவே உள்ளது. அடுத்து 5 நாட்களுக்குத் தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.