“என் உயிருக்கு ஆபத்து இருக்குன்னு அப்போதே சொன்னார்” – வி.ஏ.ஓவின் அதிர வைக்கும் ஆடியோ

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகிலுள்ள சூசைபாண்டியாபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர், முறப்பநாடு கோயில்பத்து கிராம நிர்வாக அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்.  அருகிலுள்ள கலியாவூரைச் சேர்ந்த ராம சுப்பிரமணியன் என்பவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் அள்ளியது தொடர்பாக கடந்த 13-ம் தேதி, முறப்பநாடு காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ராம சுப்பிரமணியன் தலைமறைவானார். போலீஸார் அவரை தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், லூர்து பிரான்சிஸ் கடந்த 25-ம் தேதி தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது தன் நண்பர் மாரிமுத்துவுடன் ராம சுப்பிரமணியன் வந்துள்ளார்.

உயிரிழந்த வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ்

 “மண் அள்ளுனா உனக்கு என்ன? என் மேலயே போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுப்பியா?” எனச் சொல்லி  தான மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக  வெட்டினார்.  மாரிமுத்துவும் அரிவாளால் தாக்கியுள்ளார். இதில், லூர்து பிரான்சிஸின் தலை, கை, கால்களில் பலத்த  காயம் ஏற்பட்டது. மேசையிலிருந்து அப்படியே கீழே சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியினர் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த முறப்பநாடு காவல் நிலைய போலீஸார், உடலில் ரத்தக் கறையுடன் தாமிரபரணிக் கரையோரம் தப்பியோடிய ராம சுப்பிரமணியனை கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான மாரிமுத்துவை இன்று (26-ம் தேதி) கைது செய்தனர்.  லூர்து பிரான்சிஸின் படுகொலையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு  பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், லூர்து பிரான்சிஸ்  ஏற்கெனவே பணிமாறுதல் கேட்டிருந்ததாகக் கூறி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வி.ஏ.ஓ ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “தூத்துக்குடி மாவட்டத்துல பணிபுரியுற நிறைய வி.ஏ.ஓ-க்களுக்கு மனசாட்சியே இல்லையா?

லூர்துவின் மனைவிக்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்

அவரோட இறப்புக்கு ஒரு வகையில நீங்களும் காரணம். ஆனா, அவர் இறந்த பிறகு முதல் ஆளா அவருக்கு அஞ்சலி செலுத்த கிளம்பிட்டீங்க.  ’சங்கம்’ என்ற போர்வையில் சுயநலத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் நடத்திட்டு வர்றீங்க. ஆதிச்சநல்லூரில் அரசுப் புறம்போக்கு நிலத்தை அரசுக்கே மீட்டுக் கொடுத்த சம்பவத்தில் ரெண்டு வருஷத்துக்கு முன்னால இதே வி.ஏ.ஓ லூர்து சாரை அந்த கும்பல் அரிவாளால வெட்டுச்சு. அப்போ கலெக்டர் செந்தில்ராஜ் சாரை நம்ம எல்லாருமே போயி பார்த்தோம்.  தனக்கு கொலை மிரட்டல் இருக்குறதுனால  ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுல இருந்து தூத்துக்குடி தாலுகாவுல ஏதாவது ஒரு ஏரியாவுக்கு என்னை மாத்திடுங்க சார்னு சொன்னார்.

“தூத்துக்குடி தாலுகாவுல இப்போ காலிப்பணியிடம் இல்ல. ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு  டிரான்ஸ்பர் ஆயிடுறிங்களா?”ன்னு கலெக்டர் சார் சொன்னாங்க.  காலிப் பணியிடம் இருந்திருந்தா கலெக்டர் சார் நிச்சயம் செய்து கொடுத்திருப்பார். ஆனா, மூணு மாசத்துல தூத்துக்குடி தாலுகாவுல மூணு காலிப்பணியிடம் வந்துச்சு. ஆனா, லூர்து சாருக்கு அந்த பணியிடத்தை வாங்கி கொடுத்திருக்கலாமே? சங்கம் அவருக்கு என்ன செஞ்சுச்சு?  அன்னைக்கு யாருமே கண்டுகொள்ளவே இல்ல. ஆனா, இப்போ அவரோட உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்துட்டீங்க. சங்கத்தோட கவனக்குறைவு அதிகம் இருக்கு.  அவர் மட்டும் தூத்துக்குடி தாலுகா பகுதியில பணியிடம் மாறுதல் செய்ய நீங்க உதவி செஞ்சிருந்தீங்கன்னா இன்னைக்கு அவர் உயிரிழந்திருப்பாரா? அவரோட மனைவி, பிள்ளைகள் நிற்கதி ஆயிருப்பாங்களா?” எனப் பேசியிருக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் பேசினோம், “லூர்து பிரான்சிஸ் நேர்மையான அதிகாரி.

கோவில்பத்து வி.ஏ.ஓ அலுவலகம்

ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க, தனியார் வசமிருந்த 1.5 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு அரசிடம் ஒப்படைத்ததில் திறம்பட செயல்பட்டார்.  அவர் டிரான்ஸ்பர் கேட்டது உண்மைதான். ஆனால், அந்த நேரத்தில் தூத்துக்குடி தாலுகாவில் காலிப்பணியிடம் இல்லை. அருகிலுள்ள ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு செல்லுங்கள் எனச் சொன்னதற்கு மறுத்தார். வி.ஏ.ஓக்கள் டிரான்ஸ்பர் என்பது மாவட்ட ஆட்சியரின் முடிவு அல்ல. மாவட்ட வருவாய் அலுவலரின் முடிவுதான். அதுமட்டுமில்லாமல் பணிமூப்பு அடிப்படையிலும் கவுன்சிலிங் மூலமும்தான் டிரான்ஸ்பர் செய்யப்படும். அவரின் இழப்பு ஈடு கட்ட முடியாதது. நடக்கக்கூடாத ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டது. குற்றவாளிகள் நிச்சம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.