ஒரு ஆட்சி எப்படி நடைபெறக்கூடாது என்பதற்கு இந்த சிஏஜி அறிக்கையே உதாரணம் – அமைச்சர் மகேஷ் பேட்டி.!
பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை குறித்து தமிழக அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
“பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேவு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்பட இருந்தது. ஆனால், மே 7-ம் தேதி போட்டித் தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு முடிவின் தேதி மாற்றம் செய்யப்பட்டு மே 8-ம் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.
தற்போது ஒவ்வொரு துறைச் சார்ந்த சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. அந்த அறிக்கையில், அதிமுக ஆட்சியில் 3% அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளார்கள் என்பது தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பழங்குடியினர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தால் உரியவர்கள் பயன்பெறவில்லை. அந்த திட்டம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை அதிமுகவினர் முறையாக செயல்படுத்தாமல் இருந்ததால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய 1,016 ஆயிரம் கோடி ரூபாய் வரவில்லை.
அதிலும், திருச்சி பயனாளியின் இடம் லக்னோவையும், கடலூர் பயனாளியின் வீட்டின் இடம் மேற்கு வங்காளத்தையும் காட்டுகிறது. இதன் மூலம் அதிகாரிகள் இந்தத் திட்டத்தை மிகவும் அலட்சியமாகவும், முறைகேடாகவும் செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 2016-ம் ஆண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட ஆறு அதிகாரிகளைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. ஒரு ஆட்சி எப்படி நடைபெறக்கூடாது என்பதற்கு இந்த சிஏஜி அறிக்கையே உதாரணம்’’ என்று தெரிவித்தார்.