சென்னையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை தூக்கிவிட தண்டவாளத்தில் குதித்து ஓடிய போது மற்றொரு ரயிலில் அடிப்பட்டு இளைஞர் பலியானார். சிங்கப்பூர் செல்லும் நண்பனை வழியனுப்ப சென்ற போது நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திருப்பத்தூரை சேர்ந்தவர் சுவீத், சிங்கப்பூர் நாட்டிற்கு வேலைக்கு புறப்பட்ட இவரை வழி அனுப்புவதற்காக இவரது நண்பர்களான ஆசை தம்பி, கவுதம் உள்ளிட்ட 4 பேர் திங்கட்கிழமை மாலை திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு வந்தனர். விமான நிலையம் செல்வதற்காக இரவு 7 மணியளவில் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலிலில் ஏறிய நண்பர்கள் 4 பேரும் வாசல் அருகே நின்று பேசியபடி சென்றுள்ளனர்.
ரயில் மாம்பலம் மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்த போது வாசலில் உள்ள கம்பியை பிடித்து விளையாடிய ஆசைத்தம்பி என்பவர் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு பதறிபோன அவரது நண்பர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரெயில் நின்றவுடன், ரெயிலில் இருந்து இறங்கினர். நண்பர்களில் ஒருவரான கவுதம், அடுத்த ரெயில் வருவதற்குள் ஆசைதம்பியை கைத்தூக்கிவிடுவதற்காக அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்து ஓடினார். தான் குதித்த தண்டவாளத்தில் தனக்கு பின் பக்கமாக கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் வருவதை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில் மோதிய வேகத்தில் கவுதம் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதற்கிடையே ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆசைத்தம்பி தண்டவாளத்துக்கு வெளியில் கிடந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து, உயிரிழந்த கவுதம் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு நண்பனை சிங்கப்பூர் செல்ல வழியனுப்ப வந்த இடத்தில், ரெயில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்ததால் ரயிலில் அடிப்பட்டு மற்றொரு நண்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே விதியை மீறிய இரு நண்பர்களின் அலட்சியமான நடவடிக்கைகளால் ஒரு உயிர் பறிபோயிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.