புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நிறுவப்பட்டு வரும் 5-வது அலகுக்கு தேவைப்படும் நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்களை ரஷ்யாவைச் சேர்ந்த அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் அனுப்பியுள்ளது. கூடங்குளம் அணு உலை நிர்வாகம், கட்டுமானத்தில் இந்த நிறுவனம்தான் முக்கிய பங்காற்றி வருகிறது.
நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்து வருகிறது.
சர்வதேச நாடுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், ஏற்றுமதி திறனை மேம்படுத்தி உலகம் முழுவதும் பொருட்கள், சேவைகள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கி வருவதாக ரோசாட்டம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானமானது மொத்தம் 6,000 மெகாவாட் திறன் கொண்டது. இது, தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட 6 அணு உலைகளை உள்ளடக்கியது. அணு உலைகள் 1 மற்றும் 2-ல் மின் உற்பத்தி முறையே 2013 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனம் தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டத்தில் மேலும் நான்கு அணுமின் அலகுகளை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.