ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பூபேஷ் பெகல், ”காவலர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நக்ஸல்களுக்கு எதிரான சண்டை இறுதிக்கட்டத்தில் உள்ளது. அவர்களை ஒருபோதும் விட மாட்டோம்” என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, முதல்வர் பூபேஷ் பெகலுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த இடம், தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மாவட்ட காவல் படை என்பது தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள மாவோஸ்டுகளின் செயல்பாடுகளை முடக்கும் நோக்கில் மாநில காவல் துறையால் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.