சுவிட்சர்லாந்தில் 120,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2030இல் அரை மில்லியனாக உயரும் என்றும் சுவிஸ் பணி வழங்குவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பணி வழங்குவோர் கூட்டமைப்பின் ஆலோசனை
இப்படி பெருமளவில் பணியிடங்கள் காலியாக இருப்பதுடன், பகுதி நேரப் பணிகள் அதிகரித்துவருவதால், பலர் குறைந்த நேரமே பணி செய்வதாலும், நிலைமை மோசமாகி வருவதாகவும் சுவிஸ் பணி வழங்குவோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆகவே, செய்யப்படும் பணியின் அளவை அதிகரிப்பதற்காக, அதாவது பணி நேரத்தை அதிகரிப்பதற்காக, சில சலுகைகளை அளிக்கலாம் என கூறியுள்ளது அந்த கூட்டமைப்பு.
©Keystone / Christian Beutler
சுவிட்சர்லாந்தில் நீண்ட காலமாக சர்ச்சையை உருவாக்கி வரும் திருமண வரியை நீக்கி, தனி நபருக்கு எவ்வளவு வருமானமோ அதற்கேற்ப வரி விதிப்பதால், திருமண வரிக்கு பயந்து தம்பதியரில் ஒருவர் பணி செய்யாமல் வீட்டிலிருக்கும் நிலை மாறி, சுமார் 60,000 பேர் பணிக்கு வர வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது சுவிஸ் பணி வழங்குவோர் கூட்டமைப்பு.
இப்படி சலுகைகளை அளித்து, பணி நேரத்தையும், செய்யப்படும் பணியின் அளவையும் அதிகரிக்கலாம் என அந்த அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் அமைப்புகள் எதிர்ப்பு
ஆனால், பணி செய்யும் நேரத்தை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள சுவிஸ் வர்த்தக அமைப்பு மறுத்துவிட்டது.
பணிச்சூழல் முதலான விடயங்கள் மேம்படுத்தப்படவேண்டும், அப்போதுதான் பணியாளர்களின் பணிக்கும் குடும்பத்துக்குமான சமநிலை சரியாக இருக்கும் என்பதுடன், பணியாளர்களை கடுமையாக வேலை வாங்கினால் அவர்கள் நோய்வாய்ப்படவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது சுவிஸ் வர்த்தக அமைப்பு.