"சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை" – ஐ.நா. கவலை

கார்ட்டூம்: சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், “அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட. அது முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே மோதல்கள் நடக்கின்றன. இருதரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஏனெனில் ஆயுத பலம் மூலம் நிச்சயமாக வெற்றி பெறலாம் என இரு தரப்புமே நம்புகிறது. இந்தச் சூழலில் சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சூடானின் கார்ட்டூம் நகரில் உள்ள தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் கலவரக்காரர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கே ஏதேனும் விபரீதம் நடந்தால் ஆராய்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகள் கசிவு ஏற்படலாம். இதனால் சூடானில் தொற்றுநோய் பரவலாம் என்று உலக சுகாதார நிறுவனத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் சூடான் ஆயுதப் படைகளும் (எஸ்ஏஎஃப்), துணை ராணுவப் படையும் (ஆர்எஸ்எஃப்) கடந்த 15-ம் தேதி முதல் சண்டையில் ஈடுபட்டு வருகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இரு தரப்பும் அதற்கு கட்டுப்படவில்லை. தலைநகர் கார்ட்டூம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த சண்டையால் இதுவரை 427 பேர் உயிரிழந்ததாகவும், 3,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனைகளில் பிணவறைகள் நிரம்பி வழிவதாகவும், தெருக்களில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதாகவும் மருத்துவர் சங்கத் தலைவர் அத்தியா அப்துல்லா தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களான குடிநீர், உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாத், தெற்கு சூடான், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

சூடானில் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களை சாலை, விமானம் மற்றும் கடல்மார்க்கமாக பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கடந்த 4 நாட்களில் 4,000-க்கும் மேற்பட்டோர் சூடானில் இருந்து வெளியேறியுள்ளனர். ஐ.நா. படையை சேர்ந்த 700 பேரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் போர் புரியும் இருதரப்புமே அமைதிக்கு தயாராக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.