புதுடில்லி, ஆபத்தான மூலப் பொருட்கள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், விளம்பரத்தை நிறுத்தும்படியும், பாக்கெட்களில் உள்ள ‘லேபிள்’களை மாற்றும்படியும், ‘போர்ன்விடா’ என்ற ஊட்டச்சத்து பானத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘கேட்பரி’ நிறுவனம் தயாரிக்கும், போர்ன்விடா ஊட்டச்சத்து பானம், இந்தியாவில் ௧௯௪௮ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிறுவனத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ‘மான்டலெஸ் இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம், ௨௦௧௦ல் வாங்கியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதள பிரபலமான ரேவந்த் ஹிமந்த்சின்ஹா என்பவர் ஒரு பதிவை வெளியிட்டார். ஊட்டச்சத்து நிபுணரான அவர், போர்ன்விடாவில் அதிகளவு சர்க்கரை உள்ளதாகவும், குழந்தைகளுக்கு புற்றுநோயை உருவாக்கக் கூடிய பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டார்.
இந்தக் குற்றச்சாட்டை, மான்டெல் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் அவருக்கு அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது.
சட்ட ரீதியில் வழக்குகளை சந்திக்க போதிய பண வசதியில்லாததால், தன் பதிவை நீக்குவதாக ஹிமந்த் சின்ஹா அறிவித்தார். இதற்குள், அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, மான்டலெஸ் இந்தியா நிறுவனத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள தாவது:
இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணைய நிர்ண யித்துள்ள அளவுகளின்படி, போர்ன்விடாவில் உள்ள பொருட்களின் அளவு இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, சர்க்கரையின் அளவு, ௧௦௦ கிராமுக்கு, ௩௭.௪ கிராமாக உள்ளது. இது, ௧௫ சதவீதம் அதிகமாகும்.
அதுபோல, ‘மால்டோடெக்ஸ்டிரின், லிக்விட் குளூகோஸ்’ போன்றவை, தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இது விதிமுறைகளை மீறியதாகும். இவற்றை, கூடுதல் சர்க்கரை அளவின் கீழ் குறிப்பிடவேண்டும்.
இதுபோல், புற்றுநோயை உண்டாக்கக் கூடும் பொருட்களும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து ஊட்டச்சத்து பானம் என்ற பெயரில், தவறாக வழிநடத்தும் வகையில் போர்ன்விடாவின் விளம்பரங்கள் உள்ளன. அதோடு, விதிகளை மீறி குழந்தைகளை மையமாக வைத்தும் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
இது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்பதற்கு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகளும் வேண்டும்.
எனவே, இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து, தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை நீக்க வேண்டும். அதுபோல், போர்ன்விடா பாக்கெட்களில் உள்ள லேபிள்களையும் மாற்ற வேண்டும்.
போர்ன்விடாவில் உள்ள உண்மையான உள்பொருட்கள் குறித்த விபரங்களை இவற்றில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்